சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) இன்று (ஏப்ரல் 8) வெளியிட்ட தகவலின்படி, ரிவர் வேலி சாலையில் (River Valley Road) உள்ள ஒரு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பெரியவர்களும் 15 குழந்தைகளும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
காலை 9.45 மணியளவில் 278 ரிவர் வேலி சாலையில் தீ விபத்து குறித்து SCDF-க்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், மூன்று மாடி கடைவீட்டு கட்டிடத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது தளங்களில் தீ வேகமாக பரவியிருந்ததை கண்டனர்.
சம்பவத்தின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டன. அதில், கரும்புகை மண்டலத்தின் மத்தியில் மூன்றாவது மாடியின் விளிம்பில் குழந்தைகள் அமர்ந்திருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியது.
அருகிலிருந்த கட்டுமானப் பணியாளர்கள் உட்பட பொதுமக்கள் சிலர், அங்கு அமைக்கப்பட்டிருந்த சாரக்கட்டுகளைப் பயன்படுத்தி அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். வீடியோக்களில் காணப்பட்ட அடையாளங்களின்படி, பாதிக்கப்பட்ட கட்டிடம் சிறு குழந்தைகளுக்கான கல்வி மையம் என்பது தெரியவந்துள்ளது.
SCDF தனது முகநூல் பதிவில், “மூன்றாவது மாடிக்கு வெளியே இருந்த விளிம்பில் பலர் சிக்கியிருந்தனர். கட்டுமானப் பணியாளர்கள் உட்பட பொதுமக்கள், உலோக சாரக்கட்டு மற்றும் ஏணியைப் பயன்படுத்தி அவர்களை அடைந்து பலரை பத்திரமாக மீட்டனர்,” என்று தெரிவித்துள்ளது.
மீட்பு ஏணிகள் மற்றும் ஒருங்கிணைந்த மேடை ஏணி உடனடியாக பயன்படுத்தப்பட்டு, விளிம்பில் சிக்கியிருந்த மற்றவர்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டது. அதே நேரத்தில், தீயணைப்பு வீரர்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது தளங்களுக்குச் சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மூன்று தண்ணீர் பீச்சிகள் மூலம் 30 நிமிடங்களுக்குள் தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த தீ விபத்தில், கடைவீட்டு கட்டிடத்திலும் அருகிலுள்ள இடங்களிலும் இருந்த சுமார் 80 பேர் காவல்துறையினராலும் SCDF அதிகாரிகளாலும் வெளியேற்றப்பட்டனர். மொத்தம் 19 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக SCDF தெரிவித்துள்ளது.
தீ விபத்திற்கான காரணம் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
“சிக்கியிருந்தவர்களை விரைவாகவும் தைரியமாகவும் மீட்க உதவிய பொதுமக்களுக்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று SCDF கூறியுள்ளது.