சிங்கப்பூர்: ரிவர் வேலி (River Valley) கடைவீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியிருந்த குழந்தைகளை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய நான்கு வெளிநாட்டு ஊழியர்களுக்கு மனிதவள அமைச்சு சிறப்பு கெளரவம் அளித்துள்ளது.
திரு சுப்பிரமணியன் சரன்ராஜ், திரு நாகராஜன் அன்பரசன், திரு சிவசாமி விஜயராஜ் மற்றும் திரு இந்தர்ஜித் சிங் ஆகியோரே அந்த துணிச்சல் மிக்க ஊழியர்கள் ஆவர்.
சம்பவ தினத்தன்று, இவர்கள் அனைவரும் தீ விபத்து ஏற்பட்ட கடைவீட்டிற்கு எதிரே அமைந்திருந்த கட்டுமானத் தளத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தனர். அப்பொழுது கடைவீட்டில் இருந்து புகை வருவதையும், குழந்தைகளின் அழுகுரலையும் கேட்டு உடனடியாக அவர்கள் உதவிக்கு விரைந்தனர்.
அவர்கள் கட்டுமானத்ளத்தில் இருந்த சாரக்கட்டினைப் பயன்படுத்தி, தீப்பிடித்த கடையில் சிக்கியிருந்த பெரியவர்களையும், குழந்தைகளையும் பத்திரமாக வெளியே கொண்டு வந்தனர்.
இந்த தன்னலமற்ற மற்றும் துணிச்சலான செயலைப் பாராட்டும் விதமாக, மனிதவள அமைச்சு “Friends of ACE” நாணயத்தை வழங்கி அவர்களுக்கு நன்றி தெரிவித்தது.
மனிதவள அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாட்டு ஊழியர்களின் இந்த துணிச்சல் மிக்க, தன்னலம் பாராத செயலுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். உயிர்களைக் காப்பாற்ற அனைத்தையும் இழக்கத் துணிந்த அவர்களின் நற்செயலை அமைச்சு புகழ்ந்துரைக்கிறது” என்று தெரிவித்துள்ளது.
தீயில் துணிந்த வீரர்கள்: குழந்தைகளைக் காப்பாற்றிய வெளிநாட்டு ஊழியர்கள்!
தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்ட இந்த வெளிநாட்டு ஊழியர்களை கெளரவிக்கும் விதமாக, முன்னேறும் உத்தரவாத, ஆதரவுக் குழுவின் (Forward Assurance and Support Team) துணை இயக்குநர் திரு ஜேசன் டேங் விருதுகளை வழங்கி பாராட்டினார். இந்தச் சம்பவம், ஆபத்தான சூழ்நிலைகளில் அயல்தேச ஊழியர்களின் மனிதாபிமானத்தையும் துணிச்சலையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.