சிங்கப்பூரில் நேற்று பல இடங்களில் கனமழை பெய்து வந்ததால் பல்வேறுபட்ட இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்று பொதுப் பயனீட்டுக் கழகம் ஒரு எச்சரிக்கையை நேற்று விடுத்தது.
நேற்று சிங்கப்பூரில் பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் உள்ள கால்வாய்களும், சாக்கடைகளும் அளவுக்கு அதிகமான நீர் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை சுமார் 6 மணியளவில் அப்பர் பாய லேபார் சாலை மற்றும் இயோ சூ காங் ஆகிய இரண்டு சாலையிலும் சாக்கடைகள் மற்றும் கால்வாய்களில் தண்ணீரின் அளவு சுமார் 90 விழுக்காட்டினை எட்டியதாக கழகம் அதன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டது.
மேலும் அந்த வட்டாரங்களில் திடீர் வெள்ளம் ஏற்படக்கூடும் என்றும் எச்சரித்த கழகம், அந்த வட்டார பகுதிகளுக்கு அடுத்த ஒரு மணி நேரத்திற்கு மக்கள் செல்வதை தவிர்க்கும்படி கேட்டுக் கொண்டது.
மேலும் மாலை 6.30 மணி அளவில் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் என எச்சரிக்கை விடப்பட்டது. தற்போது சிங்கப்பூரில் பல இடங்களில் கனமழை பெய்து வருவதால் மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அரசு தெரிவித்துள்ளது.