TamilSaaga

சிங்கப்பூரில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: மளிகைக் கடை உரிமையாளருக்கு 14 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை!

சிங்கப்பூரில் தனது மளிகைக் கடையில் 11 வயதுச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக, 58 வயதான ராமலிங்கம் செல்வசேகரனுக்கு சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் 14 ஆண்டுகள், மூன்று மாதங்கள் மற்றும் இரண்டு வாரங்கள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. இத்தீர்ப்பு ஜூலை 30 அன்று வழங்கப்பட்டது.

சம்பவம் நடந்தது என்ன?

2021 அக்டோபர் 28 அன்று மாலை 4.50 மணி முதல் 5.05 மணிக்குள் ஜூரோங் வெஸ்ட்டில் உள்ள தனது கடையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ராமலிங்கம், கடைக்கு வந்த அச்சிறுமிக்கு முதலில் இலவசமாகக் குளிர்பானம் கொடுத்துள்ளார். அதே நாளன்று, பனிக்கூழ் வாங்கச் சிறுமி மீண்டும் கடைக்குச் சென்றபோது, ராமலிங்கம் அவரைப் பாலியல் ரீதியில் இருமுறை துன்புறுத்தியுள்ளார். சிறுமியை கடைக்குள் அழைத்துச் சென்று அவரைத் தொட்டு, வாய்வழி பாலியல் செயலில் ஈடுபடச் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. பாலியல் தாக்குதல்களுக்குப் பிறகு, அச்சிறுமி ஒரு வழிப்போக்கரிடம் உதவி கேட்டுள்ளார், அவர் போலீசுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

வழக்கு விசாரணை மற்றும் தீர்ப்பு:

இந்த வழக்கு ஜனவரி 16 அன்று தொடங்கி நடைபெற்றது. ராமலிங்கம் தானே தனக்காக வாதாடினார். ஜூலை 7 அன்று, அவர் மீதான ஒரு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு மற்றும் இரண்டு மானபங்கக் குற்றச்சாட்டுகள் என மொத்தம் மூன்று குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளி என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

விசாரணையின்போது, ராமலிங்கம், சிறுமியின் சாட்சியம் நம்பத்தகுந்தது அல்ல என்றும், போலீஸ் கேமரா காட்சிகள் இல்லை என்றும், தனக்குப் பாலியல் குறைபாடு இருந்ததால் பாலியல் வன்கொடுமை சாத்தியமில்லை என்றும், தனது டி.என்.ஏ சிறுமியின் உடலில் இல்லை என்றும் வாதிட்டார்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

ஆனால், நீதிபதி எய்தான் சூ (Aidan Xu), சிறுமியின் சாட்சியம் நம்பகமானது எனக் கண்டறிந்தார். அவர் இளமையாகவும் முதிர்ச்சியற்றவராகவும் இருந்ததே அவர் உடனடியாகத் தப்பிக்கவோ அல்லது தாத்தாவிடம் தெரிவிக்கவோ செய்யாததற்குக் காரணம் என விளக்கினார். ராமலிங்கம் முன்பு போலீசிடம் அளித்த வாக்குமூலங்களில் குற்றம் ஒப்புக்கொண்டதையும், பின்னர் அதனை மறுக்க முயன்றதையும் நீதிபதி சுட்டிக்காட்டினார். கேமரா காட்சிகள் இல்லாதது சிறுமியின் ஆதாரத்தைப் பலவீனப்படுத்தவில்லை என்றும், பாலியல் குறைபாடு இருந்தபோதிலும் வாய்வழி பாலியல் வன்கொடுமை சாத்தியம் என நிபுணர் சாட்சியம் அளித்ததாகவும் நீதிபதி கூறினார். ராமலிங்கத்தின் டி.என்.ஏ இல்லாதது அவரது குற்றத்தைப் பாதிக்கவில்லை எனவும் நீதிபதி தெரிவித்தார்.

தண்டனை மற்றும் மேல்முறையீடு:

ராமலிங்கத்துக்கு 50 வயதுக்கு மேல் ஆவதால், அவருக்குப் பிரம்படி வழங்க முடியாது. எனவே, 15 பிரம்படிகளுக்கு ஈடாக கூடுதல் சிறைத் தண்டனை அவரது மொத்தச் சிறைத்தண்டனையுடன் சேர்க்கப்பட்டது.

ராமலிங்கத்துக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பிறகு, தான் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்றும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகவும் அவர் தெரிவித்தார். அவரது மேல்முறையீடு முடியும்வரை, அவருக்கு $80,000 ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், ராமலிங்கத்தின் உடலில் பொருத்தப்பட்டிருக்கும் மின் பட்டையை அகற்றவும், காவல் நிலையத்திற்கு அடிக்கடி சென்று கையெழுத்துப் போடுவதில் இருந்து விலக்கு அளிக்கவும் அவர் நீதிபதியிடம் கேட்ட கோரிக்கைகளை நீதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை.

அதுமட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, கடையில் இருந்து எடுக்கப்பட்ட $8 பணத்தைத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் சுசன்னா யிம் சொன்னபோது, “அந்த $8 என் கடையிலிருந்து எடுக்கப்பட்டது” என்று ராமலிங்கம் அதற்குக் கடும் ஆட்சேபனை தெரிவித்தார். இந்தப் பணம் குறித்து விசாரித்து முடிவு செய்யுமாறு நீதிபதி அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டார்.

வேலை அனுமதி முறைகேடு: குற்றவாளிக்கு MOM கொடுத்த சரியான தண்டனை!

 

Related posts