சொந்தங்களை விட்டுவிட்டு சிங்கப்பூரில் குடும்பத்திற்காக உழைப்பவர்களுக்கு பண்டிகை வந்தாலே சந்தோசம் பொங்குவதற்கு மாறாக வருத்தம் தான் ஏற்படும். என்னதான் நண்பர்கள் இடத்தில் சிரித்து பேசி வாழ்த்துக்களை சொன்னாலும் பண்டிகை நாளன்று குடும்பத்தினருடன் ஒன்றாக இருக்க முடியவில்லை என்ற ஏக்கம் உள்ளூர எல்லோருக்கும் இருக்கும்.
அந்தக் கவலைகள் தெரியாமல் இருக்க தான் சிங்கப்பூரில் வாழும் தமிழர்கள் இணைந்து விழாக்களாக கொண்டாடி மகிழ்கின்றனர். கடந்த தீபாவளி அன்று சிங்கப்பூரில் வாழும் தமிழர்கள் ஒன்றாக இணைந்து அங்கங்கே தீபாவளி கொண்டாடியதை நாம் செய்திகளாக பார்த்தோம். அதேபோல் சிங்கப்பூர் மைகிராண்ட் ஒர்க்ஸ் சென்டர் (MWC) ஊழியர்களின் பொங்கல் கொண்டாட்டத்திற்கும் ஏற்பாடு செய்துள்ளது. ஜனவரி 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 7 மணி முதல் 10 மணி வரை கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கொண்டாட்டமானது சூன் லி ரோடு,51இல் உள்ள MWC கிளப்பில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொண்டாட்டத்தின் போது தமிழ், பெங்காலி மற்றும் ஹிந்தி மொழிகளில் பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பங்கு பெறுபவர்களுக்கு ஏராளமான பரிசுகளை அள்ளித்தரும் வேடிக்கை விளையாட்டுகள் காத்திருக்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக கலந்து கொள்ளும் நபர்களில் லக்கி ட்ரா பரிசினை வெல்பவர்களுக்கு 2150 சிங்கப்பூர் டாலர் மதிப்பிலான ரொக்க பரிசு காத்திருக்கின்றது. எனவே சிங்கப்பூரில் வாழும் தமிழக நண்பர்கள் கொண்டாட்டத்தில் உற்சாகமாக பங்கு பெறுங்கள்.