TamilSaaga

சிங்கப்பூரில் போலி இணையத்தளங்கள் மூலம் $156,000 மோசடி: காவல்துறையினர் எச்சரிக்கை!!

சிங்கப்பூர்: போலியான ஈஸிலிங்க் (EZ-Link) மற்றும் சிம்ப்ளிகோ (SimplyGo) இணையத்தளங்கள் மூலம் மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் மோசடிகள் அதிகரித்துள்ளன. நடப்பு மார்ச் மாதத்தில் மட்டும் இத்தகைய தூண்டில் (Phishing) மோசடிகள் மூலம் குறைந்தது $156,000 பணம் பறிபோனதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த மாதத்தில் மட்டும் இதுதொடர்பாக 97 புகார்கள் வந்துள்ளதாகவும் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (மார்ச் 28) தெரிவித்தனர்.

சமூக ஊடகங்களான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராமில் வெளியான கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி பலர் இந்த மோசடியில் சிக்கியுள்ளனர். இந்த விளம்பரங்களில், $3 கட்டணத்தில் வரம்பின்றி பயணம் செய்யலாம் என்று ஆசை காட்டப்பட்டது.

அந்த விளம்பரங்களில் இருந்த இணைப்புகளை கிளிக் செய்தபோது, அவை ஈஸிலிங்க் அல்லது சிம்ப்ளிகோ சின்னங்களுடன் இருந்த போலி இணையத்தளங்களுக்கு சென்றன. அங்கு ஈஸிலிங்க் அட்டைகளை வாங்குவதற்காக பயனர்களின் கடனட்டை அல்லது பற்றட்டை விவரங்கள் மற்றும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் (OTP) கேட்கப்பட்டன.

சில மோசடிகளில், ‘இலவச ஈஸிலிங்க்’ அட்டை அடங்கிய ‘பரிசுப்பெட்டி’ வழங்கப்பட்டதாகவும், பின்னர் $3க்கு வரம்பற்ற பயணச் சலுகையை பெற கடனட்டை அல்லது பற்றட்டை விவரங்களை பதிவு செய்யுமாறும் போலி இணையத்தளங்கள் கோரியுள்ளன.

தங்கள் அனுமதியின்றி வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட பிறகே பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர்.

இதுபோன்ற ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றும் பதிவுகள் மற்றும் விளம்பரங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. சிங்கப்பூரில் ஈஸிலிங்க் மற்றும் சிம்ப்ளிகோ போன்றவற்றை பயன்படுத்தி சமூக ஊடகங்களில் மோசடி நடத்தப்படுவது கவலை அளிப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மோசடி நடக்கும் விதம்:

  • சமூக ஊடகங்களில் “$3 செலுத்தினால் தடையில்லாமல் பயணம் செய்யலாம்” போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்கள் வெளியிடப்படும்.
  • ஆர்வமுள்ள பொதுமக்கள் அந்த விளம்பரத்தில் உள்ள இணைப்பை கிளிக் செய்கின்றனர்.
  • அது ஈஸிலிங்க் அல்லது சிம்ப்ளிகோவின் சின்னத்துடன் கூடிய போலி இணையத்தளத்திற்கு செல்கிறது.
  • அங்கு பயனர்களிடம் கடனட்டை அல்லது பற்றட்டை விவரங்களை உள்ளிடும்படி கேட்கப்படுகிறது.
  • இதன் மூலம், அவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து அனுமதியின்றி பணம் எடுக்கப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான விளம்பரங்கள் மற்றும் இணைப்புகளை நம்ப வேண்டாம் என்றும், தங்களது தனிப்பட்ட மற்றும் வங்கி விவரங்களை எந்தவொரு நம்பகத்தன்மை இல்லாத இணையத்தளத்திலும் பகிர வேண்டாம் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

Related posts