சில சமயங்களில் கடவுளோ அல்லது இயற்கையோ, அதன் படைப்புகளை கண்டு நமக்கு அவ்வளவு கோபமும், வேதனையும் ஏற்படும். அப்படி இரண்டு கலந்த ஒரு செய்தி இது.
சிங்கப்பூரில் டேட்டா சென்டர் என்ஜினியராக பணிபுரிந்து வருபவர் Nabeel Salim Abdat. இவரது மனைவி Syahirah Yakub. இந்த தம்பதிக்கு சிங்கை National University Hospital (NUH)-ல் சமீபத்தில் Zayn எனும் அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.
பிறந்த பொழுது நன்றாக அழுத குழந்தை, சிறிது நேரம் கழித்து எந்தவித அசைவும் இன்றி கிடந்தது. 30 வினாடிகளுக்குப் பிறகு, அந்த குழந்தை மயக்கமடைந்தது. சுவாசமும் இல்லை. எனினும், முதலுதவி செய்த மருத்துவர்கள் Zayn-ஐ உயிர் பிழைக்க வைத்துவிட்டனர். அதன்பிறகு, தீவிர சிகிச்சை பிரிவில் குழந்தை அனுமதிக்கப்பட்டது.
குழந்தையை தீவிரமாக பரிசோதித்த மருத்துவர்கள், அதற்கு ஒரு அரிய மரபணு கோளாறு இருப்பதை கண்டறிந்தனர்.
இதுகுறித்து NUH-ன் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “இந்த அரிய வகை மரபணு கோளாறுக்கு பெயர் வகை 1 ஸ்பைனல் மஸ்குலர் அட்ராபி (SMA) (Type 1 spinal muscular atrophy). இது தசைகளை பலவீனமடையச் செய்யும் நரம்புத்தசைக் கோளாறு. இது உடல் பாகங்களின் செயல்பாடுகள் குறைவதற்கும், சுவாச பிரச்சனைகள், ஸ்கோலியோசிஸ் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும் என்று NUH செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இந்த தகவல் அந்த குழந்தையின் பெற்றோருக்கும் தெரிவிக்கப்பட்டது. தங்கள் குழந்தைக்கு இப்படியொரு நோயா என்று அவர்கள் கலங்கிய மறுநொடியே, அதன் சிகிச்சைக்கான செலவு பற்றி மருத்துவர்கள் சொன்ன தொகையை கேட்டு, முற்றிலும் நொறுங்கி போனார்கள்.
ஆம்! இந்த சிகிச்சைக்கு 3 மில்லியன் டாலர் தொகை செலவாகுமாம். ரூபாய் மதிப்பில் சொல்ல வேண்டுமெனில், கிட்டத்தட்ட 24 கோடி. கேட்கும் நமக்கே தலை சுற்றும்.
இந்த சிகிச்சை மேற்கொள்ளவில்லை எனில், 2 வயதில் அந்த குழந்தை இறந்துவிடும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். கிட்டத்தட்ட $3 மில்லியன் செலவாகும் இந்த சிகிச்சையானது, உலகின் மிக விலையுயர்ந்த மருந்து என்று கூறப்படுகிறது.
சாத்தியமே இல்லாத இந்த மருத்துவ செலவை ஏதோ ஒரு நம்பிக்கையில் ஏற்று, பொதுமக்களிடம் Zayn-ன் பெற்றோர் வேண்டுகோள் வைத்துள்ளனர். crowdfunding campaign மூலம் இதுவரை 540,000 டாலர்களுக்கு மேல் கிடைத்துள்ளது. ஆனால், மொத்த செலவுக்கு இன்னும் இமயமலை உயரத்துக்கு செல்ல வேண்டும்.
இயற்கை சில சமயங்களில் மிகவும் கொடியது.