சிங்கப்பூரில் கடந்த ஜூன் 18 அன்று ஆர்ச்சர்ட் சாலை கடையில் ஒரு சமூக பணியிட நிகழ்வை நடத்தியதற்காக ஆப்பிள் நிறுவனத்திற்கு 1,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தில் ஒரு ஊழியரின் இறுதி நாளைக் கொண்டாட அந்த விழாவில் உடனிருந்த ஊழியர்கள் கூடினர் என்று சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் (STB – Singapore Tourism Board) இன்று புதன்கிழமை (செப்டம்பர் 15) தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறியது. மேலும் அந்த நிகழ்வில் 50க்கும் அதிகமானோர் கலந்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிங்கப்பூரில் கோவிட் -19 (தற்காலிக நடவடிக்கைகள்) (கட்டுப்பாட்டு ஆணை) விதிமுறைகள் 2020ன் கீழ், செயல்பட அனுமதிக்கப்பட்ட நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட சமூக நிகழ்வுகளை தொழிலாளர்கள் ஒன்றுகூடம் வகையில் நடத்தக்கூடாது. சிங்கப்பூர் மீண்டும் திறக்கப்படும் ஒவ்வொரு கட்டத்திலும் ஆர்ச்சர்ட் சாலை உட்பட சுற்றுலா வணிகங்கள் மற்றும் வளாகங்களில் அமலாக்க சோதனைகளை முடுக்கிவிட்டதாக STB தெரிவித்தது.
ஆப்பிள் ஸ்டோர் மற்றும் ஷாப்பிங் மால்கள் போன்ற தனித்துவமான கடைகள் இவை இரண்டையும் உள்ளடக்கியது இந்த அமலாக்க நடவடிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் “நாங்கள் தொடர்ச்சியான அமலாக்கச் சோதனைகளை நடத்துவோம், பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகளை மீறும் வணிகங்கள் அல்லது பொதுமக்கள் மீது உறுதியான அமலாக்க நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம்” என்று STB திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட கோவிட் -19 (தற்காலிக நடவடிக்கைகள்) சட்டத்தின் கீழ், பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகளுக்கு இணங்காத குற்றவாளிகளுக்கு முதல் முறை 10,000 வெள்ளி வரை அபராதம் அல்லது ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் வழங்கப்படும். மீண்டும் மீண்டும் அதே குற்றத்தை செய்யும்பட்சத்தில் 20,000 வெள்ளி வரை அபராதம் அல்லது பன்னிரண்டு மாதங்கள் வரை சிறை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.