TamilSaaga

“வெளிநாட்டு ஊழியர்கள் யாரும் தற்கொலைக்கு முயற்சி எடுக்கல; இனியும் பொய் சொல்லாதீங்க” – லண்டனின் FT அறிக்கைக்கு சிங்கப்பூர் காட்டமான பதில்

இங்கிலாந்தின் Financial Times (FT) பத்திரிக்கையானது, தொற்று காலத்திற்கு பிறகு சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்ந்து கடுமையாக அவதிப்படுவதாக செய்தி வெளியிட்டது. மேலும், சிங்கப்பூரில் உள்ள பல புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் சுதந்திரம், லாக்டவுனுக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் கடுமையாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கை சர்வதேச அளவில் கவனம் பெற்றது.

இந்நிலையில், லண்டனில் தனது கடிதம் மூலம் சிங்கப்பூர் உயர் தூதரக அதிகாரி Lim Thuan Kuan, இந்த செய்தியை முழுவதும் மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில், “தற்போது தனது தங்குமிடத்தை விட்டு வெளியேற விரும்பும் எந்த புலம்பெயர்ந்த தொழிலாளிக்கும் தடை விதிக்கப்படுவதில்லை. community visit passes-கான விண்ணப்பங்கள் கிட்டத்தட்ட தானாகவே அங்கீகரிக்கப்படும். இந்த மாத இறுதியில் மேலும் தளர்வுகள் கொடுக்க உத்தேசித்துள்ளோம்.

உங்கள் அறிக்கையில் உண்மையில்லை. ஏனெனில், சிங்கப்பூரர்கள் மற்றும் பிற குடியிருப்பாளர்களைக் கவனித்துக்கொண்டதைப் போலவே தான் வெளிநாட்டு தொழிலாளர்களையும் சிங்கப்பூர் அரசாங்கம் கவனித்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 2020 இல் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தங்குமிடங்களில் கோவிட் -19 பரவிய போது, “ஒரு டஜனுக்கும் மேற்பட்ட ஆண்கள் பெரும்பாலும் ஒரே அறையில் தங்கியிருக்கும் நிலைமை ஏற்பட்டது. ஒரேயொரு பாத்ரூமை 200 பேர் பகிர்ந்து கொண்ட நிலை இருந்தது” என்றும் அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் படிக்க – சிங்கப்பூரின் “சென்னை ட்ரேடிங் சூப்பர்மார்ட்” – தடைகள் பல தாண்டி சாதித்த தமிழன் ராமமூர்த்தி

இதனால் மனஉளைச்சல் அடைந்த சில ஊழியர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்கள் என்றும் அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்கொலை குறித்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள திரு லிம், “ஊழியர்களின் தற்கொலை முயற்சிகள் தங்குமிடத் தரத்தை மேம்படுத்தத் தூண்டியது என்ற இந்தக் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது” என்று கூறினார்.

மேலும், “முதலாவதாக, புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடையே தற்கொலை விகிதம் பொது சமூகத்தை விட குறைவாக உள்ளது. இரண்டாவதாக, எங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதற்கு நாங்கள் நீண்ட காலமாக சிரத்தை எடுத்து வருகிறோம், அதை தொடர்ந்து செய்வோம். சிங்கப்பூர்வாசிகள் தெளிவுடன் இருக்கிறார்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்” என்று தெரிவித்தார்,

சிங்கப்பூர் அதன் அனைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் விரிவான மருத்துவ உதவியை வழங்கியது. தற்போது, எங்கள் குடிமக்களை விட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அதிக விகிதம் முழுமையாக தடுப்பூசி போடப்படுகிறது,” என்று லிம் கூறியுள்ளார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts