சிங்கப்பூர்: சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் (Changi Airport) சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஒன்பது வெளிநாட்டினர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
30 முதல் 48 வயதுக்குட்பட்ட இந்த சந்தேக நபர்கள், தங்களது சொந்த நாட்டினரைத் தொடர்பு கொண்டு தங்கம் மற்றும் கைபேசிகளை வெளிநாட்டிற்கு எடுத்துச் செல்லுமாறு கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு பரிசாக பணம் வழங்கப்படும் என்றும் அவர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர்.
இது தொடர்பாக சிங்கப்பூர் காவல் துறை, குடிவரவு மற்றும் சோதனை ஆணையம் (ICA), மனிதவள அமைச்சகம் (MOM) மற்றும் சாங்கி விமான நிலைய குழுமம் ஆகியவை இணைந்து மார்ச் 30 அன்று ஒரு கூட்டறிக்கை வெளியிட்டன.
அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்லது எப்போது நாடு கடத்தப்பட்டார்கள் என்ற விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை. எனினும், மார்ச் 22 அன்று நடத்தப்பட்ட கூட்டு சோதனையின் பின்னர் இவர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையின் முடிவில், அவர்களில் எட்டுப் பேரின் வேலை அனுமதி (Work Permit அல்லது S-Pass) மனிதவள அமைச்சகத்தால் ரத்து செய்யப்பட்டது. மேலும், குறுகிய கால அனுமதி (Short-Term Visit Pass) பெற்றிருந்த ஒருவரின் அனுமதியும் குடிவரவு மற்றும் சோதனை ஆணையத்தால் ரத்து செய்யப்பட்டது. குறுகிய கால அனுமதி பெற்றவர்கள் சிங்கப்பூருக்கு சுற்றுலா, மருத்துவ சிகிச்சை அல்லது சமூக சந்திப்பு போன்ற குறிப்பிட்ட காரணங்களுக்காக மட்டுமே வர முடியும், அவர்களுக்கு வேலை செய்ய அனுமதி கிடையாது.
அந்நியர்களுக்காக பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் பொதுமக்களை எச்சரித்துள்ளனர். அவ்வாறு செய்வது பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தலாம் அல்லது சட்டவிரோத செயல்களில் ஈடுபட வழிவகுத்து கைது மற்றும் வழக்கு நடவடிக்கைகளுக்கு உள்ளாக்க நேரிடும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னதாக கடந்த அக்டோபர் மாதம், இதேபோன்ற தடையை மீறி விமான நிலையத்திற்குள் நுழைந்து ஒருவரிடம் தங்கம் கொண்டு செல்லச் சொன்னதற்காக ஒருவர் ஆறு நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் அதிகாரிகள் சட்டவிரோத செயல்களை தீவிரமாக கருதுவதாகவும், சட்டத்தை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டார்கள் என்றும் அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.