சிங்கப்பூரில் வாடகைக்கு வீடு தேடுபவர்களைக் குறிவைத்து ஒரு மோசடி நடந்து வருவது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
சிங்கப்பூர் வாடகை வீடு
சிங்கப்பூரில் பெரும்பாலான குடியிருப்புகள் அரசின் வசம்தான் இருக்கிறது. குறைவான சதவிகித வீடுகள்தான் தனிநபர்களுக்குச் சொந்தமாக இருக்கிறது. இதனால், தனி நபர்களுக்குச் சொந்தமான வீடுகள் வாடகைக்குக் கிடைப்பதற்கு கொஞ்சம் சிரமப்பட வேண்டும். இதேபோல், வீட்டு உரிமையாளர்களும் தங்களின் வசதிக்கு ஏற்ப தேவையை செயற்கையாக அதிகப்படுத்தி வாடகைக்கு வீடு தேடுபவர்களை ஏமாற்றும் சம்பவமும் அவ்வப்போது நடப்பதுண்டு. அப்படி ஒரு மோசடிதான் சமீபத்தில் அரங்கேறியிருக்கிறது. வீட்டு வாடகையும் 15 முதல் 20% வரையும், ஏன் ஒரு சில இடங்களில் 50% வரையும் அதிகமாகியிருக்கிறது. இது வாடகைக்கு வீடு தேடுபவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சூழ்நிலையில் புதிய மோசடி பற்றி வெளியாகியிருக்கும் தகவல் அவர்கள் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது.
எப்படி நடந்தது மோசடி?
சிங்கப்பூர் Serangoon Avenue 1 இல் இருக்கும் ஒரு அபார்ட்மெண்டில் வாடகைக்கு வீடு எடுக்க 3 தம்பதியினர் தனித்தனியாக முயன்றிருக்கிறார்கள். அவர்கள் கிட்டத்தட்ட 4,000 சிங் டாலர்கள் பணத்தை வீட்டு ஓனருக்கு அனுப்பியிருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு வீடும் கிடைக்காமல் பணமும் திரும்பக் கிடைக்காமல் மோசடிக்கு இரையாகியிருக்கிறார்கள். இவர்களில் ஒரு தம்பதி வீட்டைப் பார்ப்பதற்காகச் சென்றபோது வீட்டின் உரிமையாளர் சம்பவ இடத்தில் இல்லை. வீடு வாடகைக்குப் பிடித்துக் கொடுக்கும் ஏஜெண்ட் ஒருவரும், இன்னும் சிலரும் அங்கே இருந்திருக்கிறார்கள். கூட இருந்தவர்களைப் பற்றி விசாரித்தபோது அவர்கள் உரிமையாளரின் உறவினர்கள் என்றும், அவர்களும் வீடு பார்க்கவே வந்திருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள். இதனால், டிமாண்ட் அதிகமாவதற்கு முன்பு நாமே வீட்டை எடுத்துக் கொள்ளலாம் என அந்தத் தம்பதியினர் முன்பணமாக ஒரு தொகையை வீட்டு உரிமையாளருக்கு அனுப்பியிருக்கிறார்கள். ஆனால், அதன்பிறகுதான் தெரிந்திருக்கிறது தாங்கள் ஏமாற்றப்பட்டது.
இதேபோல் மற்றொரு சம்பவமும் நடந்திருக்கிறது. வீட்டைப் பார்க்க நிறைய பேர் வருவது போல் செயற்கையாக ஒரு காட்சியை உருவாக்கி, வீடு பார்க்க வருபவர்கள் நன்கு சிந்தித்து முடிவெடுப்பதற்குள் அவர்களை வலுக்கட்டாயமாக பணத்தை அனுப்ப வைத்திருக்கிறார்கள். பணம் அனுப்பிய பிறகுதான், அந்தப் பணமும் திரும்ப வராது; வீடும் நமக்குக் கிடைக்கப்போவதில்லை என்பது பாதிக்கப்பட்டவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. இதுபற்றி வீட்டு உரிமையாளரிடம் கேட்டபோது, தனக்கும் பணம் வரவில்லை என்று கூறி பாதிக்கப்பட்ட ஒருவரிடம் அழுததாகவும் சொல்கிறார்கள்.
இதுபற்றி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சம்மந்தப்பட்ட வீட்டு உரிமையாளரை அழைத்து போலீஸார் விசாரித்தனர். அவர்களிடம் பணத்தைத் திரும்பக் கொடுத்துவிடுவதாகக் கூறியதுடன், புகாரை வாபஸ் பெறுமாறும் கேட்டுக்கொண்டிருக்கிறார் அந்த நபர். ஆனால், சொன்னபடி பணத்தைத் திரும்பத் தராமல் ஏமாற்றுவதாகவும் குமுறுகிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள். இதனால், சிங்கப்பூரில் வீடு தேடுபவர்கள் இதுபோன்ற மோசடி வலையில் சிக்கிவிடாமல் இருக்கும்படி உஷாராக இருக்கும்படி அறிவுறுத்துகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.