வளர்ச்சித் துறைகளில் எல்லைக் கட்டுப்பாடுகள் மற்றும் மனிதவளத் தேவை ஆகியவை தற்போது சிங்கப்பூரில் வேலை காலியிடங்களை கடந்த செப்டம்பர் மாதத்தில் 98,700 ஆக உயர்த்தியுள்ளதாக இன்று புதன்கிழமை (டிசம்பர் 15) வெளியிட்ட அறிக்கையில் சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு கடந்த ஜூன் மாதம் அறிவிக்கப்பட்ட 92,100 வேலை காலியிடங்களிலிருந்து இது ஒரு அதிக அளவிலான உயர்வென்று கூறப்படுகிறது.
கடந்த செப்டம்பரில் சராசரியாக 100 வேலையில்லாத நபர்களுக்கு சுமார் 209 வேலை வாய்ப்புகள் இருந்தன. இது ஜூன் மாதத்தில் 163 ஆக இருந்தது, கடந்த இரண்டு தசாப்தங்களில் முதல் முறையாக வேலைவாய்ப்பற்றோருக்கான வேலை காலியிடங்களின் விகிதம் இரண்டுக்கு மேல் உயர்ந்துள்ளது என்று சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்ந்து ஐந்தாவது காலாண்டில் காலியிடங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது, இருப்பினும் அதிகரிப்பின் வேகம் குறைந்தே உள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டுத் தொழிலாளர்களின் வரவைக் கட்டுப்படுத்திய எல்லைக் கட்டுப்பாடுகளால் காலிப் பணியிடங்கள் அதிகரித்தன, வலுவான வேலைவாய்ப்பு வளர்ச்சி இருந்தபோதிலும் இந்த மொத்த வேலையின்மை (புலம்பெயர்ந்த வீட்டுப் பணியாளர்களைத் தவிர) டிசம்பர் 2019 முதல் 173,100 ஆகக் குறைந்துள்ளது. குறிப்பாக, உற்பத்தி, கட்டுமானம், உணவு மற்றும் பான சேவைகள் மற்றும் நிர்வாக மற்றும் ஆதரவு சேவைகள் போன்ற பணி அனுமதி வைத்திருப்பவர்களில் கணிசமான வீழ்ச்சியைக் கண்ட துறைகளில் இது வெளிப்படுகின்றது. இந்தத் துறைகள் அனைத்து வேலை காலியிடங்களில் 38 சதவீதத்தைக் கொண்டுள்ளன என்பதும் நினைவுகூரத்தக்கது.
“எல்லை கட்டுப்பாடுகள் நீக்கப்படும் வரை வேலை காலியிடங்களின் எண்ணிக்கை மற்றும் வேலையில்லாத நபர்களுக்கான வேலை காலியிடங்களின் விகிதம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று MOM தனது மூன்றாம் காலாண்டு தொழிலாளர் சந்தை அறிக்கையில் தெரிவித்துள்ளது.