சிங்கப்பூரில் பணியிடங்களில் தொழிலாளர்கள் காயம் அடைந்து மரணம் அடையும் செய்தியை நாம் அடிக்கடி கேள்விப்படுவதுண்டு. பணியிடங்களில் போதுமான அளவு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாதது மற்றும் தொழிலாளர்களின் கவனக்குறைவு போன்றவை தொழிலாளர்களின் மரணத்திற்கு காரணமாக உள்ளன. எனவே சிங்கப்பூரின் மனிதவள் அமைச்சகம் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்களில் அடிக்கடி ஆய்வுகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளது.
அவ்வாறு கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற்ற சோதனைகளின் பொழுது உலோக வேலைப்பாடு செய்யும் நிறுவனங்களுக்கு $32,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரு மாதங்களில் 650 க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் பெயரில் 498 நிறுவனங்களுக்கு சரியாக விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தினால் எச்சரிக்கை கடிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
அது மட்டுமல்லாமல் 14 நிறுவனங்களுக்கு டிமெரிட் பாய்ண்ட்ஸ் கொடுக்கப்பட்டுள்ளன. இவ்வாண்டு தொடக்கத்தில் பணியிடங்களில் மரணமடைந்த தொழிலாளர்களின் 40 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் உலோக நிறுவனங்களை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதனை ஒட்டி பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றுமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஊழியர்கள் வேலை தொடங்கும் முன் பணி தொடர்பான பாதுகாப்பு சிறப்பம்சங்கள் சரியாக உள்ளனவா என்பதை சோதனை செய்த பின்பு பணியை தொடங்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.