மலேசியா மற்றும் சிங்கப்பூர் இடையேயான எல்லைகளை விரைவில் மீண்டும் திறப்பது பற்றி விவாதிக்கப்படுகிறது என்று மலேசியாவின் வெளியுறவு அமைச்சர் சைஃபுதீன் அப்துல்லா நேற்று செப்டம்பர் 23 அன்று கூறியுள்ளார். தி ஸ்டார் நாளிதழின் அறிவிப்பின்படி, திவான் ராக்யாத்தில் சட்டமன்ற உறுப்பினர்களிடம் உரையாற்றிய போது சைபுதீன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
தொற்றுநோய் காரணமாக கடந்த மார்ச் 18, 2020 அன்று எல்லைகள் மூடப்பட்டதிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பிரிக்கப்பட்டிருக்கும் மலேசிய குடும்பங்களின் கவலைகளுக்கு சட்டமன்ற உறுப்பினர்களின் பதிலாக இது இருந்தது. மலேசியாவின் மூத்த பாதுகாப்பு அமைச்சரும் மலேசியாவின் கோவிட் -19 தேசிய மீட்பு திட்டத்தின் குழு உறுப்பினருமான ஹிஷாமுதீன் ஹுசைனிடம் இந்த விஷயம் எழுப்பப்பட்டதாக சைஃபுதீன் கூறினார்.
மலேசியாவின் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் சிங்கப்பூரின் சுகாதார அமைச்சர் ஓங் யே குங்குடனான தொலைபேசி அழைப்பில் இரு நாடுகளுக்கிடையேயான எல்லைகளை எவ்வாறு மீண்டும் திறப்பது என்பது பற்றி பேசியதாக தனக்கு தகவல் கிடைத்ததாக சைஃபுதீன் மேலும் கூறினார். “இரு நாடுகளுக்கிடையில் எல்லைகளை எவ்வாறு மீண்டும் திறக்கலாம் என்பது குறித்து சுகாதார அமைச்சர் தனது சிங்கப்பூர் சகாவுடன் தொலைபேசி உரையாடலில் இருந்ததாகவும் எனக்குத் தெரிவிக்கப்பட்டது” என்று சைஃபுதீன் கூறினார்.
தி நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அளித்த தகவலின்படி சைஃபுதீன், ஜோகூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான “முன்மொழியப்பட்ட தினசரி எல்லை தாண்டிய இயக்கமான” தினசரி பயண ஏற்பாட்டையும் குறித்து பேசினார் என்று தகவல் வெளியாகியுள்ளது. செப்டம்பர் 23ம் தேதியன்று நடந்த மெய்நிகர் மாநில பாதுகாப்பு சிறப்பு குழு கூட்டத்தின் போது ஒப்புக்கொள்ளப்பட்ட இந்த திட்டம், ஜோகூர் முதல்வர் ஹஸ்னி முகமதுவால் புத்ராஜயாவுக்கு சமர்ப்பிக்கப்படும்.