TamilSaaga

“சிங்கப்பூரில் 20 ஆண்டுகளாக வீட்டு வேலை” : ஓய்வின்றி உழைத்த தொழிலாளி ரூபி – மெய்யானது அவருடைய கனவு

ரூபி நசாரினோ – 1972 ல் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து சில மணி நேரங்கள் தொலைவில் இருக்கிற சாந்தா குரூஸ் லாகுணா எனும் ஒரு கிராமத்தில் பிறந்த  கனவுகள் நிறைந்த பெண். அந்த கனவுகளுக்கு அடிப்படை இல்லாமல் இல்லை.

பெரும்பாலும் தனது கிராமத்திற்கு உள்ளேயே வளர்க்கப்பட்டாலும் செவிலியராக பணிபுரிந்த தனது உறவினர் ஒருவரைப் போல தானும் ஒரு செவிலியர் ஆக வேண்டும் எனும் சிறுவயது ஆசையோடு பள்ளிப்படிப்பை முடித்திருக்கிறார். மேற்கொண்டு சில ஆண்டுகள் படித்தால் போதும் தனது கனவு நனவாகிவிடும் என்கிற வேளையில் தனது குடும்பத்தின் ஏழ்மை நிலையும்,தனக்கு அடுத்து பிறந்த இரண்டு இளையவர்களின் எதிர்காலமும் ரூபியை வேலைக்கு அனுப்பி வைத்துவிட்டது.

உருளைக்கிழங்கு வறுவல் தொழிற்சாலை, தொலைக்காட்சி உதிரி பாகங்கள் செய்யும் தொழிற்சாலை,வாகன உதிரி பொருட்கள் விற்பனை கடை என மாறி மாறி வேலை செய்தாலும் குடும்பத்தின் பொருளாதார தேவைகள் அதிகமானதே தவிர குறையவில்லை.

தைவானில் நல்ல சம்பளத்துக்கு வேலை கிடப்பதாக அறிய வந்து அதற்கு முயற்சி செய்து பார்த்த போது அதுவும் தோல்வியில் முடிய சோர்ந்து தான் போனார் ரூபி.

கட்டுமான பொருட்கள் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை செய்யும் தந்தை, பழங்கள் விற்கும் தாய், பள்ளிக்கூடம் போய் படிக்கும் இரண்டு இளையவர்கள் என ரூபியின் குடும்பத்தின் சூழ்நிலை வெளிநாட்டில் வேலை செய்யும் அவரது முயற்சியை தொடர செய்தது. இறுதியாக குவைத்தில் வீட்டு வேலைக்குச் செல்லும் முடிவுக்கு வந்தார்.

முயற்சி பலன் தர, எப்படியும் குடும்பத்தின் பொருளாதார நிலையை உயர்த்தி விடலாம் என்னும் ஆசையோடு அங்கே வேலைக்குச் சென்றார். ஆனால் அங்கே அவர் சந்தித்த பல கசப்பான அனுபவங்களும், அவர் வேலைக்கு சென்ற இடத்தில் அவர் பட்ட துன்பங்களும், கையில் இருந்த கொஞ்சம் சேமிப்பு போடு பணிக்காலம் முடிந்ததும் அதை நீடிக்காமல் மீண்டும் பிலிப்பைன்சுக்கே திரும்பச் செய்தது.

இங்கே வீட்டில் நிலையோ இன்னும் மோசமாக இருந்தது. ஏற்கனவே வசித்த வீட்டிலிருந்து வெளியே அனுப்பப்பட்டு, தங்கள் வருமானத்தை விட அதிக அளவு செலவு தரக்கூடியதாக உள்ள ஒரு வாடகை வீட்டில் வாழ நேர்ந்தது. இப்படி ஒரு நிலையில் தான் ரூபி ஏற்கனவே சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்து கொண்டிருந்த தனது உறவினர் ஒருவர் வழியாக  

2000  ம் ஆண்டில் வீட்டு வேலை செய்பவராக சிங்கப்பூருக்கு வந்தார்.

ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகள் இடைவிடாத கடின உழைப்பு ! எப்படி எல்லாம் பணத்தை சேமித்து, மிச்சப்படுத்தி, வீட்டிற்கு அனுப்ப முடியுமோ, அந்த விதங்களில் எல்லாம் ரூபி கடினமாக உழைத்து சேமித்து அனுப்பினாலும் கூட, விலைவாசி ஏற்றம், வாடகை வீட்டின் தொந்தரவுகள், போதாதென தன் தம்பிக்கு தொடர்ந்து உதவி செய்ய வேண்டிய கட்டாயம், திருமணமாகி ஒரு சிறு பெண் குழந்தையோடு கணவனை பிரிந்து வீட்டிற்கு வந்துவிட்டே தங்கையையும் சேர்த்து பராமரிப்பது என குடும்பத்தின் தேவைகளும் செலவுகளும் உயர்ந்து கொண்டே தான் இருந்ததே தவிர ஒரு நிலையான பொருளாதார பாதுகாப்பை அவர்கள் குடும்பம் பெறமுடியவில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக முதலில் சொந்தமாக ஒரு சிறிய வீடாவது இருப்பதுதான் குடும்பத்திற்கு பாதுகாப்பு கொடுக்கும்  என்பதை உணர்ந்த ரூபி தனது தொடர் முயற்சியால் 2015ஆம் ஆண்டு தங்களது கிராமத்தில் ஒரு சிறிய நிலத்தை விலைக்கு வாங்கி தனது குடும்பத்திற்காக ஒரு வீட்டை கட்டியிருக்கிறார். 2021 கடன் எல்லாம் அடைத்து தன் குடும்பத்திற்காக சொந்தவீடு வாங்கிய மகிழ்ச்சியில் இருக்கிறார்.

தனது செவிலியர் கனவை புதைத்துக்கொண்டு, ஏறக்குறைய முப்பது ஆண்டுகளாக பெரிய படிப்பு எதுவும் இல்லாமல், சிறு சிறு வேலைகளை செய்து தன் குடும்பத்திற்காக சொந்த வீடு வாங்கியிருக்கிற ரூபியின் வளர்ச்சி நிதானமான அதே சமயம் அசாத்தியமான, திரைப்படங்களை மிஞ்சும் ஒரு முன் உதாரணம் தான்… இல்லையா?

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts