டோக்கியோவில் தற்போது நடைபெற்று வரும் 32 வது ஒலிம்பிக் போட்டிகள் இதுவரை நடந்த போட்டிகளை போல இல்லாமல் ஒரு மிக பெரிய தொற்று காலத்தில் நடைபெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. பல நாடுகளை சேர்ந்த 11,000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் இந்த போட்டியில் பாதுகாப்பாகவும், அதே சமயம் மிகுந்த ஆர்வத்துடனும் பங்கேற்று பதக்கங்களை வென்று வருகின்றனர். இந்த முறை நடைபெறவிருக்கும் போட்டிகளுக்கு பார்வையாளர்கள் அனுமதி இல்லை என்பது சற்று வருத்தமளிக்கும் விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும் மக்களின் சுகாதார நிலை கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழா கடந்த ஜூலை 23ம் தேதி தொடங்கியது. அதைத் தொடர்ந்து 16 நாட்கள் போட்டி நடைபெறுகிறது. இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து 12 வெவ்வேறு போட்டிகளில் 23 போட்டியாளர்கள் இந்த ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் இதுவரை இந்த டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளில் சிங்கப்பூர் எந்தவிதமான பதக்கங்களையும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் படகோட்டி பந்தய விளையாட்டில் முதல்முறையாக சிங்கப்பூர் அணி இறுதிச்சுற்றுக்கு சில தினங்களுக்கு முன்பு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக் வரலாற்றில் 49erFX படகோட்டி பந்தய விளையாட்டில் சிங்கப்பூர் அணி இறுதிச்சுற்றுக்கு செல்வது இதுவே முதல்முறை. இருப்பினும் இறுதிச்சுற்றின் முடிவில் சிங்கப்பூர் அணி 9வது இடத்தை பிடித்தது. போட்டியின் முடிவில் பிரேசில் அணி தங்க பதக்கத்தையும், ஜெர்மனி வெள்ளி பதக்கத்தையும் மற்றும் நெதர்லாந்து அணி வெண்கலப்பதக்கத்தையும் வென்றது.