சிங்கப்பூரில் நேற்று புதன்கிழமை வெளியான தகவலின்படி தற்போது அமலில் உள்ள கட்டுப்பாடுகள் மேலும் ஒரு மாதகாலத்திற்கு நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதனால் பாதிக்கப்பட்ட வணிகங்கள் மற்றும் தொழிலாளர்களுக்காக 640 மில்லியன் அளவில் ஆதரவு தொகுப்பு உருவாக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. சுகாதார அமைப்பில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்க உதவுவதற்காக கடந்த செப்டம்பர் 27 அன்று தொடங்கப்பட்ட கட்டுப்பாடுகள் வரும் அக்டோபர் 24 வரை நீடிக்கும் என்று முன்பே கூறப்பட்டது.
ஆனால் இது இப்போது நவம்பர் 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, எதிர்வரும் இரண்டு வாரங்களில் நாட்டில் உள்ள நடவடிக்கைகளை மதிப்பாய்வு செய்து, அப்போதைய சூழ்நிலையின் அடிப்படையில் அவை மேலும் சரிசெய்யப்படலாம் என்று சுகாதார அமைச்சகம் (MOH) ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது. நீட்டிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால், சிங்கப்பூர் அரசு JSS எனப்படும் வேலை ஆதரவுத் திட்டத்தை நவம்பர் 21 வரை தொடரும், இறுக்கமான நடவடிக்கைகளால் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கு 25 சதவீத ஊதிய ஆதரவு இதன்முலம் வழங்கப்படும்.
சிங்கப்பூரின் நிதி அமைச்சகம் வெளியிட்ட பதிவு
இதில் F&B நிலையங்கள், சில்லறை விற்பனை, சினிமாக்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் கலைக்கூடங்கள், குடும்ப பொழுதுபோக்கு மையங்கள், சுற்றுலா, உடற்பயிற்சி நிலையங்கள் மற்றும் உடற்பயிற்சி ஸ்டுடியோக்கள் மற்றும் கலை மற்றும் கலைக் கல்வி ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அரசுக்குச் சொந்தமான வணிகச் சொத்துக்களில் தகுதியுள்ள குத்தகைதாரர்களுக்கு இரண்டு வார வாடகை தள்ளுபடி வழங்கப்படும்.
தகுதியான குத்தகைதாரர்கள் மற்றும் தனியாருக்குச் சொந்தமான வணிகச் சொத்துகளின் உரிமையாளர்-ஆக்கிரமிப்பாளர்களுக்கும் வாடகை ஆதரவு திட்டத்தின் (RSS) கீழ் 0.5 மாத வாடகை நிவாரண ரொக்கப் பணம் வழங்கப்படும். தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் (NEA) அல்லது NEA ஆல் நியமிக்கப்பட்ட ஆபரேட்டர்களால் நிர்வகிக்கப்படும் மையங்களில் சமைக்கப்பட்ட உணவு மற்றும் சந்தை கடைக்காரர்கள் 0.5 மாத வாடகை தள்ளுபடியைப் பெறுவார்கள்.