TamilSaaga

மாதம் 9 லட்சம் சம்பளமும் வேண்டாம்.. குடியுரிமையும் வேண்டாம்… சிங்கப்பூரில் சொர்க்கமாய் கிடைத்த வாழ்க்கையை தூக்கியெறிந்து விட்டு சொந்த ஊரில் ஆடு, மாடு மேய்க்கும் தம்பதி…!

சிங்கப்பூரில் லட்சக்கணக்கில் சம்பாரித்து வந்த தம்பதி இதை விட சொந்த உறவுகள் தான் முக்கியம் எனக்கூறி தமிழ்நாட்டிற்கு திரும்பி தற்போது அங்கு விவசாயம் செய்துக் கொண்டிருக்கின்றார்கள்.

தர்மபுரியை சேர்ந்தவர்கள் விமலா தேவி மற்றும் கணேசன் தம்பதிகள். 2002ம் ஆண்டில் சிங்கப்பூரில் இருந்த பெரிய ஐடி நிறுவனத்தில் கணேசன் ஆலோசகராகவும், விமலா வியாபார ஆலோசகராகவும் பணியாற்றி வந்தனர். 9 லட்சம் மாத வருமானத்தில் சிங்கப்பூர் குடியுரிமையும் அவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. நல்ல நிலையில் இருந்து வந்தனர். ஆனால் தாய்நாட்டை பிரிந்து தனியாக இருப்பதே அவர்களுக்கு கவலையை அதிகரித்து வந்தது. உடனே தமிழ்நாட்டிற்கு திரும்பி விடலாம் என முடிவெடுத்து ஐடி நிறுவனத்தில் இருவரும் ராஜினாமா செய்துவிட்டு தற்போது நாடு திரும்பி அங்கு விவசாயம் செய்து வருகிறார்கள்.

இதுகுறித்து தமிழ்நாட்டில் வெளிவரும் தினசரி நாளிதழான தினமணிக்கு கொடுத்த பேட்டியில் இருவரும் கூறியிருப்பது, மாதம் 9 லட்சம் வந்த நிலையில் தற்போது அதில் ஒரு மடங்கு தான் சம்பாரிக்கிறோம். ஆனால் அங்கு இருந்ததை விட இங்கு மனம் நிறைவாக இருக்கிறது. எங்கள் பிள்ளைகளுக்கு இந்த சூழ்நிலை தான் பிடித்து இருக்கிறது.

அப்பா, அம்மா இங்கு தனியாக இருக்கின்றார்கள். அவர்களுக்கு ஒத்தாசைக்கு யாரும் இல்லை. இதுவும் நாங்கள் நாடு திரும்பியதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. குழந்தைகளுக்கு நமது கலாச்சாரம் தெரியவேண்டும். உறவுகள் குறித்த புரிதல் வேண்டும் என நினைத்தோம். இருந்தும் ஊருக்கு வந்துவிட்டால் என்ன செய்வது என்ற குழப்பம் அதிகமாக இருந்தது.

அப்போது தான் சுபாஷ் பாலேக்கரின் பேச்சை கேட்டோம். நம்மாழ்வார் போன்று நிறைய கூறினார். அவர் அறிவுரைகளை எடுத்துக்கொண்டு சிறிய அளவில் நிலம் வாங்கி அதில் மா, பாக்கு மரங்களை நட்டு ஆடு,மாடு மற்றும் கோழி வாங்கி மேய்த்து வருகிறோம்.

பிரச்னைகள் இருந்தாலும் உறவுகளை சந்திக்கும் போது அது எதுவும் மனதுக்குள் இருப்பதில்லை. வேலை, வேலை என தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்த எங்களுக்கு இப்போது தான் மனம் நிறைவாக இருக்கிறது.

சிங்கையில் எங்களுக்கு கிடைத்த 9 லட்ச ரூபாய் வந்த வருமானம் எங்களுக்கு சொர்க்கமாக கிடைக்கவில்லை. சொந்த ஊரில் உறவுகளுடன் இருப்பதும், இங்கு ஆடு, மாடு மேய்க்கும் போதும், நிறைவாக குடும்பத்துடன் நேரம் செலழிக்கும் போது தான் சொர்க்கமாக இருப்பதாக குறிப்பிடுகின்றனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts