சிங்கப்பூர், ஏப்ரல் 4: நோன்புப் பெருநாளையும் தொழிலாளர் தினத்தையும் ஒருசேர கொண்டாடும் விதமாக இஸ்தானா தனது கதவுகளை இம்மாதம் 13ஆம் தேதி பொதுமக்களுக்காக திறக்கவுள்ளது.
காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் கலாசார இசை, நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளை கண்டு மகிழலாம்.
மார்ச் 31ஆம் தேதி கொண்டாடப்பட்ட நோன்புப் பெருநாளையும், மே மாதம் 1ஆம் தேதி வரவிருக்கும் தொழிலாளர் தினத்தையும் முன்னிட்டு இஸ்தானா பொதுமக்களுக்காக திறக்கப்படுவதாக பிரதமர் அலுவலகம் நேற்று அறிவித்தது.
லசால் கலைக் கல்லூரியின் பாரம்பரிய மலாய் இசை நிகழ்ச்சியும், செம்பவாங் தொடக்கப் பள்ளி மற்றும் உட்லண்ட்ஸ் உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்தானா வில்லாவில் பொதுமக்கள் அரச அன்பளிப்புகளை பார்வையிட முடியும். மேலும், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முன்பதிவு செய்தவர்கள் இஸ்தானாவின் பாரம்பரிய சுற்றுப்பயணத்திலும் கலந்து கொள்ளலாம்.
கேரிங்எஸ்ஜி (CaringSG), சிங்கப்பூர் குழந்தைகள் மன்றம் (Singapore Children’s Society) போன்ற சமூக சேவை அமைப்புகள் அமைத்துள்ள சிறப்பு கூடங்களையும் பொதுமக்கள் பார்வையிடலாம்.
சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் நிரந்தரவாசிகளுக்கு இஸ்தானாவிற்குள் நுழைய கட்டணம் எதுவும் இல்லை. அவர்களது குடும்பத்துடன் வரும் வெளிநாட்டு பணிப்பெண்களுக்கும் இது பொருந்தும்.
மற்றவர்களைப் பொறுத்தவரை, பெரியவர்கள் 20 வெள்ளி மற்றும் சிறுவர்கள் 10 வெள்ளி கட்டணமாக செலுத்த வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு go.gov.sg/visitistana என்ற இணையதளத்தை அணுகலாம்.