போலி Work Permit ஆவணங்களை வைத்துக்கொண்டு சிங்கப்பூர் வர முயன்றதாக இரண்டு பெண்கள் மீது மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். House Maid எனப்படும் இல்ல பணிப்பெண் வேலைகளை வாங்கித் தருவதாக உறுதியளித்த ஒரு முகவருக்கு அந்த இரண்டு பெண்கள் தலா ரூ.50,000 கொடுத்ததாக கூறப்படுகிறது. 27 வயதுடைய இந்த பெண்கள் இருவரும் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இப்பொது அவர்கள் மும்பையில் போலீசால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
வெளியான முதல் தகவல் அறிக்கையின்படி, கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு, சோனா கவுர் மற்றும் சர்ப்ஜித் கவுர் என்ற அந்த இரண்டு பயணிகள், காலை 8.55 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்ட இண்டிகோ விமானத்தில் சிங்கப்பூர் வருவதற்காக மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர். குடியேற்ற கவுண்டர் (Immigration Counter) எண். 42ல், சோனா கவுர் தனது பாஸ்போர்ட் மற்றும் பணி அனுமதி ஆவணங்களை சமர்ப்பித்தார்.
அப்போது அங்கிருந்த குடியேற்ற அதிகாரி அபிஷேக் குமார், சிங்கப்பூருக்கு தான் செல்லவுள்ள நோக்கம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் அவரால் திருப்திகரமான பதிலை வழங்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. சந்தேகம் அதிகரித்ததால், மேலும் விசாரணைக்காக தனது மூத்த அதிகாரியிடம் அவரை அனுப்பியுள்ளார். இதற்கிடையில், சர்ப்ஜித் கவுர் தனது பாஸ்போர்ட் மற்றும் பணி அனுமதி ஆவணங்களை கவுண்டர் எண். 41ல் சமர்ப்பித்தார்.
சோனாவைப் போலவே, அவரும் தனது சிங்கப்பூர் வருகைக்கான சரியான காரணத்தைக் கூறத் தவறியுள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட குடியேற்ற அதிகாரியால் விசாரணை தொடங்கப்பட்டது. விசாரணையில், இரு பெண்களும் சண்டிகரில் வசிக்கும் சமந்தீப் கவுர் என்ற முகவரைத் தொடர்பு கொண்டதாகத் தெரியவந்தது. அந்த முகவர், சிங்கப்பூரில் வீட்டு வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து, ஒவ்வொரு பெண்ணிடமிருந்தும் ரூ.50,000 பெற்றுக்கொண்டு, போலியான பணி அனுமதி ஆவணங்களை வழங்கியுள்ளார் என்று தெரியவந்துள்ளது.
சிங்கையில் வெளிநாட்டு ஊழியரை அடித்த உயர் அதிகாரி – கொதித்தெழுந்த இணையவாசிகள்..!
சிங்கப்பூர் மனிதவள அமைச்சகத்தின் போர்ட்டலில் உள்ள ஆவணங்களை குடிவரவு அதிகாரிகள் சரிபார்த்தனர், ஆனால் அவர்களின் அனுமதி குறித்து எந்தப் பதிவும் கிடைக்கவில்லை. பின்னர் அவர்கள் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு, அவர்கள் பணி அனுமதிகள் போலியானவை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
போலி முகவர்களை நம்பி இரண்டு இந்திய பெண்கள் சுமார் 1 லட்சம் ரூபாயை இழந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.