SINGAPORE: நாட்டிற்குள் நுழையும் கெடுபிடிகளை கணிசமாக தளர்த்துவதன் மூலமும், VTL (தடுப்பூசி போடப்பட்ட பயணப் பாதை) பல நாடுகளுக்கு விரிவுபடுத்துவதன் மூலமும், நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட VTL பயணிகளின் எண்ணிக்கையை மூன்று மடங்காக அதிகரிப்பதன் மூலமும், தடுப்பூசி போடப்பட்ட வெளிநாட்டினருக்கு சிங்கப்பூர் எல்லைகளை முழுமையாக மீண்டும் திறக்கும் தன் நோக்கத்தை சிங்கப்பூர் கடந்த வாரம் அடையாளம் காட்டியது.
இதுகுறித்து, சிங்கப்பூரின் போக்குவரத்து அமைச்சர் திரு எஸ் ஈஸ்வரன் கடந்த புதன்கிழமை (பிப்ரவரி 16) ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், “எல்லைகளை மீண்டும் திறப்பது மற்றும் உலகளாவிய வணிக மற்றும் விமான மையமாக சிங்கப்பூரின் நிலையை மீட்டெடுப்பது முக்கியம்” என்று கூறியிருந்தார்.
மேலும்,”எங்கள் இறுதி இலக்கு என்பது தடுப்பூசி போடப்பட்ட அனைத்து பயணிகளுக்கும் தனிமைப்படுத்தல் இல்லாமல் சிங்கப்பூர் வருவதை உறுதிப்படுத்துவது ஆகும்” என்று அமைச்சர் ஈஸ்வரன் கூறியிருந்தார்.
பிப்ரவரி 15 வரை, VTL திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து மொத்தம் 389,046 பேர் சிங்கப்பூருக்குள் நுழைந்துள்ளனர்.
இந்நிலையில் சிங்கப்பூர் அரசின் புதிய அறிவிப்பின் மூலம், பிப்ரவரி 22 முதல் VTL மூலம் சிங்கப்பூருக்குள் நுழையும் தகுதியுள்ள பாஸ் வைத்திருப்பவர்கள் நுழைவு அனுமதிக்கு (Entry Approval) இனி விண்ணப்பிக்கத் தேவையில்லை. நேற்று (பிப்.21) நள்ளிரவு 11:59 மணியோடு அந்த விதிமுறை அதிகாரப்பூர்வமாக விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த புதிய நடவடிக்கை மூலம், வேலைவாய்ப்பு பாஸ், Dependent அல்லது எஸ் பாஸ் போன்ற நீண்ட கால பாஸ் வைத்திருப்பவர்கள் இனி Entry Approval இல்லாமல் சிங்கப்பூருக்கு வரலாம்.
அதேபோல், பிப்ரவரி 25 முதல், ஹாங்காங், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் சிங்கப்பூரின் VTL திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், மார்ச் 4 முதல், இஸ்ரேல் மற்றும் பிலிப்பைன்ஸும் இந்த பட்டியலில் சேர்க்கப்படுகிறது.
Visitors-களுக்கான விதிகளை தளர்த்துவது மீண்டும் சிங்கப்பூரின் எல்லைகளை திறப்பதற்கான ஒரு முக்கிய படியாக பார்க்கப்படுகிறது. மேலும் அதன் அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது இது மிகவும் தாராளமயமானதாக உள்ளது.
எல்லைகளை திறக்கும் சிங்கப்பூரின் முடிவால், கடந்த வாரம் வெள்ளியன்று முடிவடைந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) பங்கு விலை, வாரத்தின் குறைந்தபட்ச விலையிலிருந்து நான்கு சதவிகிதம் அதிகமாக இருந்தது.
முன்னதாக தனது ஜனவரி மாத செயல்பாட்டு புள்ளிவிவர தகவலை ஆராய்ந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம், ஒரு மாதத்திற்கு முன்பு இருந்ததை விட 2022 ஜனவரியில் பயணிகளின் தேவையில் சிறிது சரிவை கவனித்ததாக தெரிவித்துள்ளது. Omicron தோன்றியதால் டிசம்பர் 22 முதல் ஜனவரி 20 வரை VTL விமானங்களுக்கான புதிய டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டதே இதற்குக் காரணம். அதன்பிறகு, டிக்கெட் விற்பனை மீண்டும் தொடங்கியுள்ளது மற்றும் VTL ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தான் மீண்டும் எல்லைகளை திறக்கும் அறிவிப்பு சரியான நேரத்தில் வெளியாகியுள்ளது.
இருந்த போதிலும், SIA குழுமத்தின் (குறைந்த விலை கேரியர் Scoot உட்பட) Capacity 126 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த Capacity கணக்கு (இருக்கை-கிலோமீட்டர்களில் அளவிடப்படுகிறது) ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 2.8 சதவீதம் மாத வளர்ச்சி அடைந்துள்ளது. அதாவது, கொரோனாவுக்கு முன்பு இருந்த வளர்ச்சியில், 46 சதவீதம் தற்போது எட்டப்பட்டுள்ளது. இருப்பினும், பயணிகள் போக்குவரத்து (revenue passenger kilometres) முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 11.7 சதவீதம் குறைந்துள்ளது. மேலும் ஜனவரி 2022க்கான அதன் பயணிகள் வருகை, 6.5 சதவீத புள்ளிகள் குறைந்து 40 சதவீதமாக உள்ளது. இருப்பினும், ஆண்டுக்கு ஆண்டு இதில் 28.7 சதவீத புள்ளிகள் அதிகரித்துள்ளன.
ஜனவரி 2022 இறுதியில், SIA இன் பயணிகள் நெட்வொர்க் சிங்கப்பூர் மற்றும் மும்பை, டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு, கொல்கத்தா உட்பட 13 இந்திய நகரங்கள் உட்பட 86 இடங்களை உள்ளடக்கி இயக்கப்பட்டது.
1970 தரவுகளில் இருந்து இப்போது வரை பார்த்தால், 2021 ஆம் ஆண்டில் தான் மிகக் குறைந்த அளவில் சர்வதேச சுற்றுலாப் பயணிகளை சிங்கப்பூர் வந்திருக்கின்றனர். இப்போது, எல்லைகள் திறப்பு காரணமாக, சிங்கப்பூர் சுற்றுலாத் துறையும் ஆதாயம் பெறும். சிங்கப்பூரில் கடந்த 2021ம் ஆண்டு 330,000 பார்வையாளர்களை மட்டுமே வந்திருந்தனர். கடந்த 2019 ஆம் ஆண்டில் 19.1 மில்லியன் பார்வையாளர்கள் சிங்கப்பூர் வந்திருந்தனர். அதில் 1.42 மில்லியன் மக்கள் இந்தியாவிலிருந்து வருகை தந்தனர். அதாவது, இந்தியாவில் இருந்து வந்தவர்கள் தான் மூன்றாவது அதிக எண்ணிக்கையாகும்.
2019 ஆம் ஆண்டில், சுற்றுலா மூலம் சிங்கப்பூர் SGD 27.7 பில்லியன் (USD 20.4 பில்லியன்) வருமானம் பெற்றது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நான்கு சதவிகிதம் ஆகும்.
இந்த சூழலில், இப்போது மீண்டும் சிங்கப்பூர் தனது நாட்டிற்குள் நுழையும் பார்வையாளர்களுக்கான கெடுபிடிகளை தளர்த்தி இருப்பதால், மீண்டும் மெல்ல மெல்ல நாட்டின் வருமானமும் அதிகரிக்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, வரும் நாட்களில் இந்தியாவில் இருந்து அதிக அளவிலான பயணிகள் சிங்கப்பூர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.