நேற்றைய ஆட்டத்தை இந்திய ரசிகர்கள் யாரும் எளிதில் மறந்து விட முடியாது. வரிசையாக 10 தொடர்களையும் வென்ற இந்தியா உலகக் கோப்பையும் வென்றே தீரும் என்ற நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் திரண்டு இருந்தனர். அது மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்கள் காலையிலிருந்து தொலைக்காட்சியின் முன்னிலையில் ஆர்வத்துடன் அமர்ந்து காத்திருந்தனர்.
டிக்கெட்டின் விலையும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் வரை இருந்தது என வலைதளங்களில் பரவி இருந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பவுலிங் தேர்வு செய்த பொழுது எல்லோருக்கும் இவர்கள் என்னதான் செய்யப் போகின்றார்கள் என்ற ஆர்வம் கண் முன் வந்து நின்றது. ஆனால் தொடக்கம் முதலே ஆடுகளத்தில் புயலாக செயல்பட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் 40 வீரர்களுக்கு இணையாக பீல்டிங் செய்தனர் என்று கூறலாம். எந்த ஒரு பந்துகளையும் பௌண்டரிக்கு போக விடாமல் முடக்கிய ஆஸ்திரேலியா அணி இந்தியா பேட்ஸ்மேன்களை திணறடித்து ரன்னை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்திய பேட்ஸ்மேன்கள் எப்படியோ திக்கு முக்காடி 240 ரன்கள் சேர்த்தனர். அதன் பிறகு களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி எளிதான ரன் இலக்கு என்ற நம்பிக்கையில் புத்துணர்ச்சியுடன் களமிறங்கியது. ஆனால் முதல் பத்து ஓவருக்குள் அதிரடியாக மூன்று விக்கெட்டுகளை இந்திய அணி வீழ்த்தியதும் மைதானம் எங்கும் ஆரவாரம் கூடியது. அதற்கு பின்பு ஆஸ்திரேலியா அணி நிதானத்தை கடைபிடிக்க தொடங்கியது.மூன்று விக்கெட்டுக்கு பிறகு ஒரு விக்கெட்டையும் கூட இழக்காமல் 43 ஓவர்களில் எளிதாக இலக்கினைஎட்டி ஆறாவது முறையாக உலக கோப்பை தொடரை கைப்பற்றினார்.
என்னதான் நம் நாட்டின் மீது பற்று இருந்தாலும் அதை காட்ட வேண்டிய ஒரே இடம் கிரிக்கெட் இல்லை என்பதை நாம் உணர வேண்டும். இது ஒரு விளையாட்டு என்பதால் விளையாட்டு ஏதாவது ஒரு அணி தான் வெற்றி பெற முடியும். இதுவரை வரிசையாக இந்திய அணி வென்ற பத்து தொடர்களையும் ரசித்த நாம் அவர்களின் தோல்விகளையும் ஏற்றுக் கொள்ளவே வேண்டும். நேற்று இந்தியா வீரர்கள் மைதானத்தில் கண் கலங்கி நின்ற காட்சிபார்ப்பதற்கு மிகவும் கடினமாய் இருந்தது. எனவே இதுவரை அவர்களை கொண்டாடிய நாம் அவர்களின் தோல்வியின் போது அவர்களுடன் பக்கபலமாய் நிற்க வேண்டும்.