TamilSaaga

படித்ததோ வெறும் 1ம் வகுப்பு.. சிங்கப்பூரில் ‘Painting Inspector’ அளவுக்கு அசுர வளர்ச்சி.. திக்கு தெரியாமல் சிங்கை வந்தவர்களுக்கு கைக்கொடுத்த “வீரையா” – கண் முழிக்கும் முன்னே உயிர் போனதே!

சிங்கப்பூரில் நேற்று (ஜூன்.24) நிகழ்ந்த உயிரிழப்பு ஒன்று பல ஊழியர்களை வேதனையடையச் செய்துள்ளது.

ஆம்! தூண்டி வீரையா.. இவரது இழப்பு பல ஊழியர்களை உலுக்கியுள்ளது. இவர் கடந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் (ஜூன்.23) மதியம் சாப்பிட்டுவிட்டு படுத்து தூங்கிய வீரையா வெகு நேரமாகியும் எழுந்திருக்கவில்லை. மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சோதித்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே உள்ள வடக்கு அம்மாபட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் தூண்டி. இவர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளராக இருந்தார். இவரது மகன் தான் வீரையா (வயது 48).

ஒன்றல்ல.. இரண்டல்ல.. 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூரில் தான் வேலை செய்து வந்தார். இதனாலேயே சிங்கைக்கு புதிதாக வரும் ஊழியர்களுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். புதிதாக வருபவர்கள் சிலருக்கு தங்க இடம் கிடைக்க தாமதம் ஏற்படும் போதெல்லாம், ஏதாவது ஒரு ஏற்பாடு செய்து அவர்களின் அன்றைய தின சிக்கலை தீர்க்கும் ஆபத்பாந்தவனாய் விளங்கினார்.

மேலும் படிக்க – 80 வருட வரலாறு.. மூன்று தலைமுறைகளின் அடங்கா உழைப்பு.. சிங்கப்பூரில் ‘Holland Village’-ன் அடையாளமாய் உருவெடுத்த செந்தில் முருகன்!

அதனாலேயே எப்போதும் இவரைச் சுற்றியே ஜே ஜே-வென ஒரு கூட்டமே இருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக இவர் படித்தது வெறும் ஒன்றாம் வகுப்பு மட்டுமே. ஆனால், இவர் வகித்ததோ கப்பல் கட்டுமானத் துறையில் ‘Painting Inspector’ பொறுப்பில். இந்த பணியில் தற்போது இருப்பவர்கள் எல்லாம் பெரும் படிப்பு படித்தவர்களே. ஆனால், ஒன்றாம் வகுப்பு மட்டும் படித்து ‘Painting Inspector’-ஆக பணியில் இருந்தது வீரையா மட்டுமே.

அந்த அளவுக்கு இவரது பணி ஆளுமையும், திறமையும் இருந்தது. பெரும் படிப்பு படித்து இந்த வேலையில் இருந்தவர்களை விட அனுபவ ரீதியாக வேலை நுணுக்கங்களில் மாஸ்டராக இருந்தவர் வீரையா.

இந்த சூழலில் தான் அவரது திடீர் மரணம், சக ஊழியர்கள் உட்பட அனைவரையும் உலுக்கியுள்ளது. நாளை (ஜூன்.26) அவரது உடல் திருச்சி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட உள்ளது. ஏற்கனவே, அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைவரும் மீள முடியா துயரத்தில், அவரது உயிர் பிரிந்த உடலை பெற்றுக் கொள்ள கண்ணீரோடு காத்திருக்கின்றனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts