TamilSaaga

“வெயில்ல நின்னு சாகுறோம்; எல்லாம் தலையெழுத்து” – சிங்கையில் சுட்டெரிக்கும் வெயிலால் ஜீவனை இழக்கும் “Construction” துறை ஊழியர்கள்

சிங்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு வெயில் பாடாய் படுத்தி வருகிறது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெப்பநிலை உச்சத்தை எட்டியதால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் ஏழு நாட்களில், தினசரி அதிகபட்ச வெப்பநிலை குறைந்தபட்சம் 35 டிகிரி செல்சியஸ் ஆக பதிவானது. ஏப்., 1ல் Admiralty-ல் அதிகபட்சமாக 36.8 டிகிரி செல்சியஸ் பதிவானது. இது, ஏப். 17, 1983 அன்று தெங்காவில் பதிவு செய்யப்பட்ட 37 டிகிரி செல்சியஸை விட வெறும் 0.2 டிகிரி செல்சியஸ் மட்டுமே குறைவாகும்.

இந்நிலையில், கட்டுமானத்துறையில் பணிபுரியும் ஊழியர்கள் இந்த கடுமையான வெப்பநிலை காரணமாக பெரும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் மணிக்கணக்கில் வெட்டவெளியில் வேலைப் பார்க்க வேண்டியுள்ளது. அது பகல் 1 மணியாக இருந்தாலும் சரி.. கட்டாயம் அந்த உச்சி வெயிலில் பார்த்தாக வேண்டும்.

மேலும் படிக்க – ஒரேயொரு வேல் மட்டும் இருந்த கோயில்.. இன்று சிங்கப்பூர் தேசிய நினைவுச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட பெருமை – ஆச்சர்யப்படுத்தும் தண்டாயுதபாணி திருக்கோயில்

இதுகுறித்து நமது தமிழ் சாகா சார்பாக சில ஊழியர்களிடம் பேசினோம். அதில் ஒருவர் கூறுகையில், “வெயிலில் வேலைப்பார்ப்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால், இத்தனை வருடங்களில் இல்லாத அளவுக்கு இப்போது அதிக வெப்பம் வீசுகிறது. அது உடலையே சுட்டெரிப்பது போல் உள்ளது. அதைத் தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கட்டுமானத்துறையில் நாம் வெயில் அடிக்கிறது என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால், இந்த வெப்பம் உண்மையில் உடலை வெகுவிரைவில் டயர்டாக்கிவிடுகிறது. தண்ணீர் குடித்துக் கொண்டே இருக்கிறோம். தினம் 3 முறை குளிக்கிறோம். அப்படியிருந்தும் உடல் நெருப்பில் நிற்பது போன்றே உள்ளது.

எனக்கு ஊரில் 8 லட்சம் கடன் இருக்கிறது. நான் இந்த வெயிலுக்கு பயந்தால் முடியுமா? சில சமயங்கள்ல இந்த வேகாத வெயில்ல தண்ணீர் கொடுக்க கூட ஆள்ளில்லாம தவிக்கிறோம். எல்லாம் தலையெழுத்து. இந்த வெயில் காலம் முடியும் வரை முடிந்த அளவுக்கு உச்சி வெயிலில் வேலை செய்யும் பணியை குறைத்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும்” என்றார்.

மே மாதத்தில், தினசரி அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸைத் தாண்டி 22 நாட்கள் இருந்தன. 13 நாட்கள் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸைத் தாண்டியது. மே 13 அன்று, Admiralty-ல் வெப்பநிலை 36.7 டிகிரி செல்சியஸ் வரை சென்றது. மே மாதத்தில் இங்கு பதிவு செய்யப்பட்ட அதிகபட்சம் இதுவேயாகும்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts