சிங்கப்பூரில் இன்று வெள்ளிக்கிழமை (மே 13) பெடோக்கில் உள்ள வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு வாரிய (HDB) குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த மேலும் மூன்று பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை காலை 6.35 மணியளவில் பிளாக் 409 பெடோக் நார்த் அவென்யூ 2ல் ஏற்பட்ட தீ விபத்து குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு (SCDF) தகவல் கிடைத்தது.
தீ குறித்து தகவல் அறிந்த அடுத்த ஆறாவது நிமிடத்தில் சம்பவ இடத்திற்கு சென்றதாக ஃபேஸ்புக் பதிவில் SCDF தெரிவித்துள்ளது.
SCDF நடத்திய மீட்பு நடவடிக்கையின் போது எரிந்துகொண்டிருந்த அந்த வீட்டின் ஒரு அறைக்குள்ளே ஒரு குழந்தை உட்பட மூவர் இருந்ததாகவும் மேலும் படுக்கையறையில் ஒரு பெண்மணி மயங்கிய நிலையில் கிடந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து மீட்புக் குழுவினருடன் வந்த மருத்துவர்களால் மயங்கிக் கிடந்த அந்த பெண்மணி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.
மீட்கப்பட்ட அந்த ஒரு குழந்தை உள்பட 3 பேருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு அவர்கள் சாங்கி பொது மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர். ஆனால் அந்த அறையில் இருந்த 3 வயது குழந்தை, 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஆகிய இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் SCDF எரிந்துகொண்டிருந்த அந்த குடியிருப்புக்கு அருகில் உள்ள பிற குடியிருப்புகளுக்கும் சென்று மூன்று பேரைக் காப்பாற்றியது.
இந்த தீ சம்பவத்தின்போது அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்த சுமார் 60 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.