மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் சிங்கப்பூர், மலேசியாவில் மீன்களின் விலை 10 முதல் 20 சதவீதம் அதிகமாக இருக்கிறது. இதற்கு முக்கியமான சில காரணங்களை மீனவர்களும் வியாபாரிகளும் சுட்டிக்காட்டுகிறார்கள். கடந்த ஓராண்டில் மட்டும் சிங்கப்பூரில் மீன்களின் விலை 20% அதிகரித்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
இதற்குக் காரணமாக மீனவர்களும் வியாபாரிகளும் பட்டியலிடும் காரணங்கள்
- டீசல் விலை உயர்வு
- பருவநிலை மாறுபாடு மற்றும் இறக்குமதி
டீசல் விலை உயர்வு
சிங்கப்பூர் கடலை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவு மீன்கள் கிடைப்பதில்லையாம். இதனால், மலேசிய கடல்பகுதிகளை ஒட்டிய Kuantan, Terengganu போன்ற பகுதிகளுக்கு சிங்கப்பூர் மீனவர்கள் பயணிக்க வேண்டிய கட்டாயம். முன்பெல்லாம், நான்கு நாட்களிலேயே 20 டன் என்கிற அளவு மீன் பிடித்துவிடுவார்கள். தற்போதைய சூழலில் அவர்கள் 6 அல்லது 7 நாட்கள் கடலில் செலவழித்தால் மட்டுமே அது சாத்தியப்படுகிறதாம். கடலில் நீண்ட நாட்கள் இருக்க வேண்டிய நிலையில், அதற்கான டீசல் செலவும் அதிகரிக்கிறது.
மற்றொரு புறம் டீசல் விலையும் 1.01 சிங் டாலரில் இருந்து 1.24 சிங் டாலராக அதிகரித்திருக்கிறது. ஒருவாரம் கடலில் மீன் பிடிக்க ஏறக்குறைய 3,20,000 சிங் டாலர்கள் டீசலுக்கு மட்டுமே செலவழிக்க வேண்டுமாம். இது கடந்த ஆண்டை விட 12 சதவீதம் அதிகம் என்கிறார்கள். இதுதவிர, பணியாளர்களுக்கான கூலி, படகின் பராமரிப்பு என இதர செலவுகளும் சேர்ந்துகொள்ளவே, மீன் பிடிப்பதற்கான மொத்த செலவும் ஏகத்துக்கும் எகிறியிருக்கிறது. சிங்கப்பூரில் மீன்கள் விலை அதிகரிக்க இது முக்கியமான காரணமாகப் பார்க்கப்படுகிறது.
பருவநிலை மாறுபாடு மற்றும் இறக்குமதி
டன் கணக்கில் பிடிக்கப்படும் மீன்களைக் கரைக்குக் கொண்டு வருவதில் பருவநிலை முக்கியமான பங்காற்றுகிறது. குறிப்பாக மீனவர்கள் பிடிக்கும் மீன்களில் ஒரு பகுதி மீன்கள் கரைக்கு வருகையில் கெட்டுப்போய் விடுகின்றன. ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட அளவு மீன்களை இந்த வகையில் இழக்க வேண்டி வருவதாகச் சொல்கிறார்கள் மீனவர்கள். சிங்கப்பூர் உணவு ஆணையம் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த ஆண்டு மட்டும் சிங்கப்பூர் மக்கள் 1,33,400 டன் மீன்களை உணவாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதில், சிங்கப்பூரில் பிடிக்கப்பட்ட மீன்கள் 8 சதவீதம் மட்டுமே. மற்றவைகளை மலேசியா, இந்தோனேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. கடுமையான காலநிலை சூழல்களால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல முடிவதில்லை. அதுபோன்ற சூழல்களில் மீன்வரத்தும் குறையும். இதுவும் விலையேற்றத்துக்கு முக்கியமான காரணம் என்கிறார்கள் மீனவர்கள்.