தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், ஒவ்வொரு விமான நிறுவனமும் பல்வேறு ஆஃபர்களை அள்ளித் தெளித்து வருகின்றன. அந்த வகையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்கு குறைவான டிக்கெட் கட்டணத்தை வழங்க முன்வந்துள்ளது.
இதுகுறித்து நேற்று (அக்.10) மாலை வெளியிடப்பட்ட அறிக்கையில், சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கும், சென்னைக்கும் இயக்கப்படும் விமானங்கள் குறித்தும், அதன் கட்டணங்கள் குறித்தும் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு செவ்வாய், புதன், வெள்ளி, மற்றும் ஞாயிறு ஆகிய நான்கு தினங்கள் விமானங்கள் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும், இதன் கட்டணம், 199 சிங்கப்பூர் டாலரில் இருந்து தொடங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
அதேபோல், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமை என வாரத்தில் 2 விமானங்கள் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும், இதன் கட்டணம் 199 சிங்கப்பூர் டாலரில் இருந்து தொடங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கு செவ்வாய் மற்றும் சனிக்கிழமை என வாரத்தில் 2 நாட்கள் விமானம் இயக்கப்படும் என்றும் இதன் கட்டணம் 211 சிங்கப்பூர் டாலரில் இருந்து தொடங்கும் என்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
ஸோ, தீபாவளியை முன்னிட்டு திருச்சி, சென்னை, மதுரை என்று வாரத்தில் மொத்தம் 8 விமானங்களை சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.