TamilSaaga

லாரியிலிருந்து விழுந்த கான்கிரீட் பலகைகள்: அப்பர் புக்கிட் தீமா நெரிசல்!

சிங்கப்பூர்: அப்பர் புக்கிட் தீமா சாலையில் லாரியில் இருந்து கான்கிரீட் பலகைகள் சரிந்து விழுந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 54 வயது லாரி ஓட்டுநர் விசாரணைக்கு உதவுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவம் நேற்று முன்தினம் (ஏப்ரல் 9) மாலை அப்பர் புக்கிட் தீமா சாலை – கோம்பாக் அவென்யூ சாலைச் சந்திப்பில் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து தொடர்பான காணொளி ஒன்று ‘எஸ்ஜிசீக்ரெட்’ எனும் டெலிகிராம் குழுவில் பரவலாகப் பகிரப்பட்டது.

அந்தக் காணொளியில், லாரியில் இருந்து சில பெரிய கான்கிரீட் பலகைகள் சாலையில் விழுந்து சிதறிக் கிடப்பதைக் காண முடிகிறது. மூன்று வழித்தடங்களைக் கொண்ட அந்தச் சாலையில் தடுப்புகள் வைக்கப்பட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்தது.

மேலும், எஸ்ஜி ரோடு விஜிலான்டெ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட மற்றொரு காணொளி, விபத்தின் தாக்கத்தையும், அதன் பின்னர் ஒரு வழித்தடம் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டதையும் காட்டுகிறது.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த காவல்துறையும், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும், இந்தச் சம்பவம் குறித்து புதன்கிழமை மாலை 6.50 மணியளவில் தகவல் கிடைத்ததாக உறுதிப்படுத்தின. எனினும், சம்பவ இடத்தில் தங்களது உதவி தேவையில்லை என்று குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அப்பர் புக்கிட் தீமா சாலையில் கான்கிரீட் பலகைகள் சரிந்து விழுந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. லாரியை ஓட்டிய 54 வயது ஆடவர் விசாரணைக்கு உதவி வருகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் மேலும் என்ன காரணங்களால் நிகழ்ந்தது என்பது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related posts