சிங்கப்பூரில் இப்படியும் சில சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன. சம்பள பாக்கியை கேட்ட ஊழியரை தாக்கிய முதலாளிக்கு, இனி அவர் மீண்டும் இதுபோன்று தவறை செய்யாத வகையில் நீதிமன்றம் தண்டனை அளித்துள்ளது.
சிங்கப்பூரைச் சேர்ந்தவர் 67 வயதான கட்டுமான நிறுவன முதலாளி Ho Seow Gai. இவரது நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்த வெளிநாட்டு ஊழியர் ரஷீத், கடந்த ஆண்டு பிப்.11ம் தேதி Ho Seow-ன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
அன்றைய தினம், பணியிடத்துக்கு வந்த முதலாளியிடம், ஊழியர் ரஷீத் தனது சம்பள பாக்கியை கேட்டுள்ளார். அதற்கு அந்த நிறுவனத்தின் உரிமையாளர் Ho Seow, ‘நாளை உனது சம்பளத்தைத் தருகிறேன்’ என்று கூறியிருக்கிறார்.
பிறகு, மறுநாளும் ஊழியர் ரஷீத், தனது சம்பள பாக்கியை கேட்டிருக்கிறார். இதையடுத்து, இந்த விஷயத்தைப் பற்றி விவாதிக்க Sungei Kadut-ல் உள்ள ஒரு தொழில்துறை தளத்தில் அவரை நேரில் சந்திப்பதாக உரிமையாளர் Ho Seow கூறினார். சிங்கப்பூரின் வடக்குப் பகுதியில் உள்ள இந்த இடத்தை அவர் ஏன் தேர்வு செய்தார் என்பது குறிப்பிடப்படவில்லை.
குறிப்பிட்ட இடத்தில் இருவரும் சந்தித்தபோது, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இறுதியில், Ho Seow 500 கிராம் எடையுள்ள இரும்புக் கம்பியின் மூலம் ரஷீத்தை தாக்கத் தொடங்கினார்.
முதல் அடி ரஷீத்தின் தலையை தாக்க, இரண்டாவது அடி அவர் தன்னைத் தற்காத்துக் கொள்ள முயற்சித்த போது கைகளில் விழுந்தது.
இந்த தாக்குதலில் ரத்தம் வடிய வடிய உதவிக்காக கூச்சலிட்ட ரஷீத், Ng Teng Fong பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரது நெற்றியில் 2cm நீளமான காயம் மற்றும் அவரது உள்ளங்கையில் ஆழமற்ற வெட்டு இருப்பது கண்டறியப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், நிறுவன உரிமையாளர் Ho Seow-க்கு 3 வார சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று (ஆக.19) உத்தரவிட்டுள்ளது.
சம்பள பாக்கியை கேட்டதற்காக பாதிப்புக்குள்ளான அந்த ஊழியர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.