19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகின் பெரும்பாலான பகுதியில் மர்ம நோய் ஒன்று மக்களை அச்சுறுத்தியது. நல்ல உடல் ஆரோக்கியமாக இருக்கும் ஒரு நபர் கூட இந்த நோய் தாக்கினால், சில மணி நேரங்களில் கடுமையான வயிற்றுப்போக்கு, தொடர் வாந்தி போன்ற அறிகுறிகளோடு முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதோடு, பாதிக்கப்பட்ட நபரோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கும் இந்த நோய் வேகமாகப் பரவியது.
இந்தியாவின் கங்கை நதிக்கரையை ஒட்டிய இன்றைய மேற்கு வங்க மாநிலத்துக்குட்பட்ட பகுதிகளில் காலரா பெருந்தொற்று முதன்முதலாகப் பரவத் தொடங்கியது. இதில், சிங்கப்பூர், மலேசியா தொடங்கி ஆசியாவின் பல நாடுகளைக் கடுமையாக இந்த நோய் பாதித்தது. இதனாலேயே, 1817-ல் தொடங்கிய இந்தப் பெருந்தொற்றை “ஆசிய காலரா” என்றே அழைத்தனர். மெக்காவுக்கு புனிதப் பயணம் மேற்கொண்டவர்களிடையே அதிகமாகப் பரவியது. முதல் ஆண்டில் மட்டும் உலக அளவில் இதனால், 30,000 முதல் 90,000 பேர் உயிரிழக்க நேரிட்டது. துறைமுக நகரங்கள் வழியாக உள்நாட்டில் நீர்வழித் தடத்தை ஒட்டிய நகரங்கள், கிராமங்கள் என இதன் வீச்சு அபாயகரமாக இருந்தது.
எப்படி பரவியது?
சிங்கப்பூரில் முதன்முதலில் 1819-ல் காலரா பாதிப்பு கண்டறியப்பட்டது. சுத்திகரிக்கப்படாத தண்ணீர் மற்றும் பாதிக்கப்பட்ட உணவால் வரும் காலரா நோய், முறையான சுத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகளால் சிங்கப்பூரில் கட்டுப்படுத்தப்பட்டது. 1850-களில் இந்த நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. இதுபோன்ற நோய்கள் எதிர்காலத்தில் வராமல் தடுக்கவே, “Contagious Diseases Ordinance” எனப்படும் தொற்றுநோய் பரவல் தடுப்புச் சட்டம் 1870-களில் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது.
முக்கியமான துறைமுகமாக சிங்கப்பூர் விளங்கியதால், அடுத்த இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு காலரா பாதிப்பு முழுமையாகத் தீரவில்லை. 1841-ல் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இது பெரும்பாலும் அப்போது நடந்த ஓப்பியம் போரில் (1839-1842) பங்கேற்பதற்காக சென்றுவந்த பிரிட்டீஷ் துருப்புகளால் சிங்கப்பூரில் பரவத் தொடங்கியது. இதனால், அதிகம் பாதிக்கப்பட்டது Telok Ayer பகுதியின் வசிந்துவந்த பழங்குடியினர் மற்றும் போர்ச்சுக்கீசியர்கள்தான்.
இந்த சூழலில் சிங்கப்பூர் வந்த H.M.S. Pelorus போர்க்கப்பல் சிங்கப்பூர் துறைமுகத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. அந்தப் போர்க்கப்பலில் வீரர்கள் பலர் காலராவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதனாலேயே, இன்றைய சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு முன்னோடியான ஐரோப்பிய Seamen’s மருத்துவமனையை அன்றைய பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் சிங்கப்பூரில் கட்டமைத்தனர். அதன்பிறகு, 1851-ல் இரண்டாவது முறையாக சிங்கப்பூரில் காலரா ருத்ர தாண்டவமாடியது. அந்த ஆண்டின் ஜனவரி தொடங்கி மே மாதம் வரையில் நீடித்த பாதிப்பில், Kampong Glam பகுதியினர் மோசமான பின்விளைவுகளைச் சந்தித்தனர். ஏப்ரல் மாத நிலவரப்படி மட்டுமே 220-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர்.
1873 காலரா பாதிப்பு
1873-ல் காலரா பெருந்தொற்று வேகமாகப் பரவத் தொடங்கிய ஜூலை மாதத்தின் சில வாரங்களுக்கு முன்பு பாங்காக் மற்றும் தாய்லாந்தில் இந்த நோயின் தாக்கம் கண்டறியப்பட்டது. தாய்லாந்தில் இருந்து வந்த கப்பல்களில் பயணித்த பயணிகள் அனைவரையும் தனிமைப்படுத்த வேண்டும் என 1873 ஜூலை 5-ல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், சிங்கப்பூரில் காலராவின் தாக்கம் மெல்லப் பரவத் தொடங்கியது. மூன்று மாதங்களில் மட்டும் நோய் பாதித்தவர்களாகக் கண்டறியப்பட்ட 857 பேரில் 448 பேர் உயிரிழந்தனர்.
இதனால், சுகாதார விதிகள் கடுமையாக்கப்பட்டதோடு, குவாரண்டைன் எனப்படும் தனிமைப்படுத்துதலும் கட்டாயமாக்கப்பட்டது. நம்மில் பெரும்பாலானோர் இப்போது தான் Quarantine என்ற வார்த்தையையே கேள்விப்பட்டிருக்கிறோம். Kandang Kerbau மற்றும் Kampong Kapor பகுதிகளில் பரவத் தொடங்கி, Rochor, Kampong Glam பகுதிகளில் பெரும் பாதிப்புகளை இந்த நோய் அந்த காலகட்டத்தில் ஏற்படுத்தியது. அன்றைய சூழலில் முறையான மருத்துவ வசதிகள் இல்லாதது, சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வும் மக்களிடம் குறைவாக இருந்ததால், நீர்வழித் தடங்களை ஒட்டிய பகுதிகளில் மிகவேகமாக காலரா பரவத் தொடங்கியது.
Kandang Kerbau-வில் பொது மருத்துவமனை வளாகத்துக்கு அருகில் இருந்த மனநல காப்பகத்தில் 1873 ஜூலை 13-ல் இந்த பாதிப்பு முதல்முறையாகக் கண்டறியப்பட்டது. சில நாட்களிலேயே 12-க்கும் மேற்பட்டோர் அங்கு உயிரிழந்ததோடு, அருகிலிருந்த பகுதிகளுக்கும் தொற்று பரவியது. தாழ்வாகவும் கழிவு நீர் வெளியேற முறையான வடிகால் அமைப்புகள் இல்லாததும், காலரா வேகமாகப் பரவக் காரணமாக அமைந்தன.
முக்கிய நடவடிக்கை
பெருந்தொற்றாக காலரா உருவெடுத்திருந்த நிலையில், அப்போதைய பிரிட்டீஷ் அரசு எடுத்த முதல் நடவடிக்கை தாழ்வான பகுதியில் அமைந்திருந்த மனநலக் காப்பகத்தில் இருந்த நோயாளிகள் அனைவரையும் Outram Road பகுதியின் Sepoy Lines-ல் இருந்த முன்னாள் ராணுவ மருத்துவமனைக்கு மாற்றியதுதான். அப்போதைய ஆட்சியாளர்கள் எடுத்த நடவடிக்கைகளால் 1873 ஆகஸ்டில் காலரா பரவுதல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
அப்போதைய மருத்துவ அதிகாரி ஹெச்.எல்.ரெண்டல், அவுட்ரம் ரோடு பகுதி நகர்ப்புறத்துக்கு அருகிலேயே அமைந்திருப்பதோடு உயரமாகவும் அதேநேரம் முறையான கழிவுநீர் வடிகால் வசதியோடும் இருப்பதால், மருத்துவமனை அந்தப் பகுதியிலேயே இருப்பதுதான் சிறந்தது என கவர்னருக்கு பரிந்துரை செய்தார். இப்படியான தொடர் நடவடிக்கைகளால் காலரா பெருந்தொற்று முடிவுக்கு வந்ததாக 1873 செப்டம்பர் 10-ம் தேதி முடிவுக்கு வந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால், வெளிநாடுகளில் இருந்து கப்பல்களில் வருவோருக்குக் கடுமையான பாதுகாப்பு நடைமுறைகள் கொண்டுவரப்பட்டதோடு, சுகாதார விதிகளும் திருத்தப்பட்டன. மேலும், செயிண்ட் ஜான்ஸ் தீவில் நிரந்தர தனிமைப்படுத்தல் மையங்களும் அமைக்கப்பட்டன.
சிங்கப்பூரில் கடந்த 1873ம் ஆண்டு ஜூலை தொடங்கி செப்டம்பர் வரை காலரா தொற்றுநோயாகப் பரவிப் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது நம்மில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. கிட்டத்தட்ட 3 மாதங்கள் இருந்த இந்தப் பெருந்தொற்று காலத்தில், அதிகாரப்பூர்வத் தகவல்களின்படி 857 பேர் பாதிக்கப்பட்டு,அதில் 448 பேர் உயிரிழந்தனர். இந்த காலத்தில் Mortality rate எனப்படும் இறப்பு சதவிகிதம் 41.5 என்பதால், சிங்கப்பூர் வரலாற்றில் மோசமான காலரா பாதிப்பாக இது கருதப்படுகிறது.