சிங்கப்பூர், ஏஸ்ட்ரிட் ஹில் பகுதியில் உள்ள கட்டுமானத் தளம் ஒன்றில், நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரி ஒன்று முதல் தளத்திலிருந்து நிலத்தடித் தளத்துக்கு கவிழ்ந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில், ‘எக்ஸ்கவேட்டர்’ வாகனத்தை இயக்கும் ஊழியர் ஒருவருக்கு சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டன.
சம்பவம் நிகழ்ந்தபோது, கவிழ்ந்த லாரிக்கு அருகே இருந்த அந்த ஊழியர், லாரி ‘எக்ஸ்கவேட்டர்’ வாகனத்தின் மீது விழுவதற்கு முன்பு தப்பித்தார். இருப்பினும், தப்பிக்க முயன்றபோது அவரது கால்களில் சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டதாக மனிதவள அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த விபத்து குறித்து செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 8) பிற்பகல் 2 மணியளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு தகவல் கிடைத்தது. காயமடைந்த ஊழியரை உடனடியாக தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அவர்கள் கொண்டு சென்றனர்.
அதேநேரத்தில், மனிதவள அமைச்சுக்கும் இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட கட்டுமானத் தளத்தை நிர்வகிக்கும் நிறுவனம் எச்எல்பிசி (HLBC) எனவும், காயமடைந்த ஊழியரை வேலைக்கு அமர்த்திய நிறுவனம் ‘டி.ஏ.ஜி கன்ஸ்டிரக்ஷன்’ எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த விபத்து தொடர்பான புகைப்படங்கள் வியாழக்கிழமை (ஏப்ரல் 10) ஃபேஸ்புக் தளத்தில் பதிவேற்றப்பட்டு, பொதுமக்களிடையே பரவலாகப் பகிரப்பட்டன.
மனிதவள அமைச்சு இந்த விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.