சிங்கப்பூர்: சாங்கி விமான நிலையத்தில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட ஒன்பது வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்கள் மீண்டும் சிங்கப்பூர் வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குற்றவாளிகள் 30 முதல் 48 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். இவர்கள், தங்கள் நாடுகளைச் சேர்ந்த மற்ற பயணிகளிடம் தங்கம் மற்றும் கைப்பேசிகளைத் தங்கள் சொந்த நாடுகளுக்கு எடுத்துச் சென்று அங்குள்ள நபர்களிடம் ஒப்படைக்க உதவி கோரியுள்ளனர். இவ்வாறு உதவி செய்யும் பயணிகளுக்கு பணம் வழங்கப்படும் என்றும் அவர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர்.
சிங்கப்பூர் காவல்துறை, குடிநுழைவு மற்றும் சோதனைச்சாவடிகள் ஆணையம் (ICA), மனிதவள அமைச்சு (MOM), மற்றும் சாங்கி விமான நிலையக் குழுமம் (CAG) ஆகியவை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட கூட்டறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடுகடத்தப்பட்ட அந்த ஒன்பது பேரின் பாலினம், அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள், மற்றும் அவர்கள் எப்போது நாடு கடத்தப்பட்டார்கள் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இந்தச் சம்பவம் தொடர்பாக, இந்த நான்கு அமைப்புகளும் இம்மாதம் 22ஆம் தேதியன்று ஒரு கூட்டு முறியடிப்பு நடவடிக்கையை மேற்கொண்டன. இதன் பின்னர் அந்த ஒன்பது நபர்களும் விசாரிக்கப்பட்டனர். விசாரணையின் முடிவில், அவர்களில் எட்டுப் பேரின் வேலை அனுமதிச்சீட்டுகள் (Work Permits, S Pass) பறிமுதல் செய்யப்பட்டன. எஞ்சிய ஒருவர் வைத்திருந்த குறுகிய காலப் பயண அனுமதி அட்டையும் ரத்து செய்யப்பட்டது.
குறுகிய காலப் பயண அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள், சுற்றுலா அல்லது மருத்துவ சிகிச்சை போன்ற காரணங்களுக்காக மட்டுமே சிங்கப்பூர் வர அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த அனுமதி அட்டையை பயன்படுத்தி சம்பளம் பெறும் அல்லது பெறாத எந்த வேலையும் செய்வது சட்டவிரோதமாகும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
முன்பின் தெரியாத நபர்களுக்காக எந்தப் பொருட்களையும் எடுத்துச் செல்ல வேண்டாம் என்று சிங்கப்பூர் அதிகாரிகள் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு செய்தால், பயணிகள் பாதுகாப்பு அபாயங்களுக்கு ஆளாக நேரிடலாம் அல்லது சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகளை சந்திக்க நேரிடலாம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம்: சிங்கப்பூர் குடிநுழைவு மற்றும் சோதனைச்சாவடிகள் ஆணையம் (ICA), மனிதவள அமைச்சு (MOM), மற்றும் சாங்கி விமான நிலையக் குழுமம் (CAG) வெளியிட்ட கூட்டறிக்கை.