SINGAPORE – பல மாற்றுத்திறனாளி குழந்தைகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த 54 வயது நபருக்கு 45 ஆண்டுகள் சிறைத்தண்டனை இன்று (ஜூன் 27) விதிக்கப்பட்டது.
சிங்கப்பூர் வரலாற்றில் ஒரு பாலியல் வழக்கில் இந்தளவுக்கு அதிகமான ஆண்டுகள் சிறைத்தண்டனை இதுவரை யாருக்கும் விதிக்கப்பட்டதில்லை.
சிங்கப்பூர் வழங்கறிஞர்களே, ‘இப்படியொரு பாலியல் குற்றத்தை பார்த்ததில்லை‘ என்று கூறும் அளவுக்கு மோசமான வழக்காக இது அமைந்துள்ளது.
இதில் கொடுமை என்னவெனில், பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் கற்றல் மற்றும் உடல் ரீதியான குறைபாடு உள்ள குழந்தைகள். தான் ஒரு qualified educational therapist என்று பெற்றோரிடம் பொய் சொல்லி அந்த குழந்தைகளின் வாழ்க்கையை நாசம் செய்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர் 2002 முதல் 2018 வரையான 16 வருட காலப்பகுதியில், பாதிக்கப்பட்ட மூன்று பிள்ளைகளுக்கு எதிரான மோசமான கற்பழிப்பு தொடர்பான ஆறு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். இதுபோன்று மொத்தம் 8 பிள்ளைகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட குழந்தைகளில் ஒருவரின் தாயுடன் அந்த நபர் உறவில் இருந்ததால், நீதிமன்ற தீர்ப்பு அந்த குற்றவாளியை பெயரை வெளியிட முடியவில்லை.
அவர் பாலியல் பலாத்காரம் செய்த போது இரண்டு சிறுமிகளுக்கு ஐந்து வயது தான். மூன்றாவது பெண்ணுக்கு எட்டு வயது. அவ்வளவே. அதுமட்டுமின்றி, தனது பாலியல் துன்புறுத்தல்களை 17 நிமிடம் ஓடக்கூடிய வீடியோவாகவும் அந்த நபர் எடுத்து வைத்துள்ளார்.
ஜூன் 2018 இல் குற்றவாளி தனது மடிக்கணினியை விற்ற பின்னரே, இந்த குற்றங்கள் வெளிச்சத்திற்கு வந்தன. லேப்டாப்பை வாங்கியவர் அதில் இருந்த ஆபாச வீடியோக்களை பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
இந்த வழக்கு விசாரணையின் முடிவில் உயர் நீதிமன்ற நீதிபதி ஆங் செங் ஹாக் கூறுகையில், “இவ்வளவு இளம் வயது குழந்தைகளுக்கு எதிராக பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு கடுமையான தண்டனை அளிக்கப்படும் என்று இந்த நீதிமன்றம் உத்தரவாதம் அளிக்கிறது.” என்றார்.
மேலும், வழங்கப்படவுள்ள இந்த தண்டனை, இதுபோல குற்றம் செய்ய நினைக்கும் ஒவ்வொருவருக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் என்று சொல்லி குற்றவாளிக்கு 45 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தார்.
அதேசமயம், நீதிமன்றத்தின் தனது செயல்பாடு குறித்து பேசிய குற்றவாளி, “நான் செய்த தவறுக்காக மிகவும் வருந்துகிறேன், அது என் வாழ்நாள் முழுவதும் என்னை உறுத்திக் கொண்டே இருக்கும். நான் புண்படுத்தியவர்களிடம் உண்மையாக மன்னிப்பு கேட்க விரும்புகிறேன், அவர்கள் என்னை மன்னிப்பார்கள் என்று நம்புகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.