சிங்கப்பூரில் புதுப்பிக்கப்பட்ட பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகளின் (SMMs) ஒரு பகுதியாக கடந்த வெள்ளிக்கிழமை (ஆக. 6) பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், வழிபாட்டுத் தலங்களில் வழிபாட்டு சேவைகள் மற்றும் பிற செயல்பாடுகளுக்கான கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 10ம் தேதி முதல் இரண்டு கட்டங்களாக தளர்த்தப்படும் என்று பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று ஆகஸ்ட் 7ம் தேதி அன்று, கலாச்சார, சமூகம் மற்றும் இளைஞர் அமைச்சகம் (MCCY) புதிய நடவடிக்கைகளின் கீழ் மத அமைப்புகளின் செயல்பாடுகளுக்கான நிலைமைகள் உட்பட, மத அமைப்புகளுக்கான மேம்படுத்தப்பட்ட SMMகளின் குறிப்பிட்ட விவரங்களுடன் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. புதுப்பிக்கப்பட்ட தளர்வுகளின் அடிப்படையில் வழிபாட்டு தளங்களில் கலந்துகொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
வெளியான அறிக்கையின்படி சிங்கப்பூரில் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி முதல், சபை மற்றும் பிற வழிபாட்டு சேவைகளில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட நிலையில் 500 வழிபாட்டாளர்கள் வரை கலந்துகொள்ளலாம்.
இது தற்போதைய 100 வழிபாட்டாளர்களின் வரம்பிலிருந்து அதிகரிக்கப்பட்ட வரம்பாகும், மேலும் இந்த 500 பேர் என்ற வரம்பு ஆகஸ்ட் மாதம் 19ம் தேதிக்கு பிறகு 1000 என்ற அளவிற்கு அதிகரிக்கப்படும். தளர்வுகள் அதிக அளவில் அளிக்கப்பட்டாலும் வழிபாட்டாளர்கள் ஐந்து நபர்களுக்கு மிகாமல் குழுக்களில் பங்கேற்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.