சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களின் நலன் மற்றும் பாதுகாப்பில் அரசு எப்போதும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அந்த வகையில் மோசமான முதலாளிகளுக்கு பாடமாக இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
சிங்கப்பூரைச் சேர்ந்தவர் Zhao Lin (வயது 35). இவர் செவிலியராக பணிபுரிந்து வந்தவர். இவரது வீட்டில் மியான்மர் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் (வயது 29) கடந்த 2016ம் ஆண்டு பணிப்பெண்ணாக வேலைக்கு சேர்ந்துள்ளார்.
வீட்டு வேலைகளைச் செய்வது மற்றும் ஜாவோவின் மகனைக் கவனித்துக்கொள்வது தான் இவரது பிரதான வேலை. ஆனால், அப்பெண்ணின் வேலையில் Zhao திருப்தி இல்லாமல் இருந்திருக்கிறார். ஒருக்கட்டத்தில் 2017 முதல் அவரை உடல் ரீதியாக துன்புறுத்தத் தொடங்கியிருக்கிறார். எப்போதெல்லாம் அவரது வேலை சரியில்லை என்று தோன்றுகிறதோ, அப்போதெல்லாம் அடித்து துன்புறுத்தி இருக்கிறார்.
குறிப்பாக 2018 ஆக.25ம் தேதி உச்சக்கட்டமாக, அப்பெண்ணின் கன்னத்தில் 10 முறை மாறி மாறி அறைந்திருக்கிறார். இவை அனைத்தும் புகாரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ‘நீ பயந்து நடுங்கும் வரை இப்படித்தான் அடித்துக் கொண்டே இருப்பேன்’ என்று உச்ச தொனியில் Zhao மிரட்டியிருக்கிறார்.
பிறகு, மாதம் 500 டாலர் என்ற சம்பளத்தை 200 டாலராக குறைத்து அப்பெண்ணின் வருமானத்தில் விளையாடியிருக்கிறார். ஒருக்கட்டத்தில் பொறுமையிழந்த அப்பெண், போலீசிடம் புகார் அளிக்க, சிசிடிவி கேமரா உதவியுடன் 100 சதவிகித ஆதாரத்துடன், வீட்டு ஓனர் Zhao-ஐ போலீசார் கைது செய்தனர்.
வழக்கு விசாரணையின் முடிவில், அந்த ஓனருக்கு 5 மாத சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 13 முதல் அப்பெண் கம்பி என்ன தயாராகிக் கொண்டிருக்கிறார்.