தமிழ் ! தமிழர்கள் ! தமிழர் பண்பாடு ! தமிழர் நாகரிகம் ! தமிழர் தொன்மை ! தமிழ் உணர்வு ! இவை எல்லாவற்றுக்குமே நாம் அடிப்படையாகக் கொண்டிருப்பது தமிழ் இலக்கியங்களைத் தான். தமிழ் இலக்கியங்கள் இல்லை என்றால், நம் வரலாறையும் நம் முன்னோர்களின் பெருமையையும், நம்மவர்கள் வாழ்ந்த செறிவான வாழ்க்கை நெறிமுறைகளையும், நாம் அறிந்திருக்கவே முடியாது. அதேசமயம் உங்களைப்போல, என்னைப் போல சாதாரண தமிழ் மக்கள் அறிந்து இருப்பதெல்லாம், அத்தகைய இலக்கியங்களில் மிக மிக மிக சிறிய, ஒரு அணுவின் துகள் அளவிலான செய்திகள் மட்டுமே!. கடல் போல் பரந்து விரிந்து இருக்கும் நம் இலக்கியங்கள், பழங்கால முன்னோர் படைப்புகள் அனைத்தையும் அறிந்து விட முடியுமா!? என்றால் நிச்சயமாக அது சாத்தியமில்லை! அதேசமயம் நாம் அறிந்த மிக பிரபலமான அந்த சில இலக்கிய கதைகளை, சற்று முழுதாக அறிந்து கொண்டால் அங்கே நமக்கு பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன எனும் இரகசியத்தை உங்களுக்கு இந்த ஆரா அருணாவின் பக்கத்தில் கோடிட்டு காட்ட விரும்புகிறேன்.
புறநானூறு !
மிகக் குறைந்தபட்சம் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் பாடம் படித்திருந்தாலே கண்டிப்பாக எல்லாரும் இந்த நூலினைப் பற்றி ஓரளவாவது அறிந்திருப்போம்! நம் முன்னோர்களின்,மன்னர்களின் பெருமையை மிகத் தெளிவாக மிக விரிவாக கண்கள் முன்னால் படம்பிடித்துக் காட்டும் ஒரு அற்புதமான படைப்பு இது .
நாம் அறிந்த கதைகளுக்குப் பின்னால் இருக்கிற அழியாத ஆச்சரியமூட்டும் வரலாற்று நிகழ்வுகளில், உங்களுக்கு கோடிட்டு காட்ட இந்தப் பக்கத்தில் நான் உதாரணமாக எடுத்திருப்பது இந்த நூலில் இருந்து சில கதைகளைத் தான்.
கடையேழு வள்ளல்களைப் பற்றியும் நாம் கேள்விப்பட்டு இருப்போம். அவர்களில் ஒருவன்தான் பேகன். கார்மேகம் கண்டு மயிலாட, மழைக்காற்றின் குளிர் தாங்காமல் தான் மயில் ஆடுகிறதோ என்று எண்ணி,அந்த மயிலுக்காக பரிதாபப்பட்டு, தனது பட்டுப் போர்வையை அதற்குப் போர்த்தியதா வள்ளல் பேகன் வரலாற்றில் கொண்டாடப்படுகிறார். எல்லாருக்கும் தெரியும் மயிலுக்கு போர்வை தந்தவன் பேகன் என்று !.
ஆனால் மயிலுக்குப் போர்வை தந்த பேகன் மனைவிக்கு என்ன தந்தான்!?. நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்!?.
பேகனின் மனைவி பெயர் கண்ணகி. கவின்மிகு, கற்புநெறி தவறாத மாதரசி அவர்.கண்ணகி என்று பெயர் வைத்தாலே கணவனால் கைவிடப்படும் நிலை உருவாகும் போல… மாதவியைத் தேடி மனைவி கண்ணகியை விட்டுச்சென்ற அந்த சிலப்பதிகார கோவலனைக் போலவே, இந்தப் பேகனும் தன் மனைவி கண்ணகியை விட்டுவிட்டு, பக்கத்து ஊரில் இருந்த ஒரு ஆடல் பெண்ணின் அழகில் மயங்கி அவளோடு குடும்பம் நடத்த சென்றுவிட்டான். அங்கே அரண்மனையில் சோகமே உருவாக கணவனை மீட்டுக் கொண்டு வரும் வழி தெரியாது நடமாடிக் கொண்டிருந்தார் கண்ணகி! இதைப் பார்த்த தமிழ் புலவர்களின் நெஞ்சம் தாங்க முடியாத துயர் கொள்கிறது. பேகனிடம் சென்று அவனுடைய தவறுக்காக கண்டித்து, மீண்டும் மனைவியோடு சேர்ந்து வாழ அறிவுறுத்துகிறார்கள்.அறிவுரை சொன்னார்கள் என்பதை விட கண்டித்தார்கள் என்றே சொல்லலாம். அவனும் தன் தவற்றினை உணர்ந்து, தமிழ் பெரியோரின் வார்த்தை கேட்டு,அதற்கு மரியாதை கொடுத்து தன் மனைவியோடு சேர்ந்து வாழ்கிறான். இந்த வரலாறும் புறநானூற்றில் தான் சொல்லப்பட்டிருக்கிறது. புறநானூறு 145 ஆவது பாடலாக, புலவர் பரணர் மனைவிக்கு துரோகம் இழைத்த மன்னன் பேகனை, மனைவியோடு சேர்ந்து வாழச் சொல்லும் அந்த கண்டிப்பு அறிவுரை குறிப்பிடப்பட்டிருக்கிறது.
வெறுமனே மன்னர்களைப் புகழ்ந்து, அவர்களது அறம், வீரம் கொடைத்தன்மை,முதலியவைகளை சிறப்பித்துக் கூறி மட்டும் புலவர்கள் பரிசுக்காக, பணத்துக்காக வாழவில்லை. மாறாக தவறு செய்வது மன்னர்களாகவே இருந்தாலும், அவர்களது தவறை துணிந்து சுட்டிக்காட்டியும்,திருத்தியும் இருந்திருக்கிறார்கள்.
அப்படி அவர்கள் கண்டிக்கும் பொழுது நம் தமிழ் மன்னர்களும் அதை பரந்த மனதோடும், கவனத்தோடும், பணிவோடும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் எனும் வரலாற்றை அறிய வரும்போது ஆச்சரியமாக இருக்கிறதா? இல்லையா?
இப்படித்தான்…!!!
சோழ மன்னன் கரிகால் பெருவளத்தானுக்கும், சேர மன்னன் பெருஞ் சேரலாதனுக்கும் பெரிய போர் வருகிறது. வெண்ணிப்பறந்தலை என்னும் இடத்தில் நிகழ்ந்த அந்த போரிலே, சோழன் கரிகால் பெருவளத்தான் வெற்றி பெறுகிறான். தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாத பெருஞ்சேரலாதன் வடக்கிருந்து மரணம் என்று சொல்லக்கூடிய, வடக்கு பகுதியை நோக்கி அமர்ந்து உண்ணாநோன்பிருந்து சாவது என்கிற முடிவை எடுத்து அதைப் போலவே இறந்துபோகிறார்.
இந்த பெருஞ்சேரலாதனை பிசிராந்தையார் என்னும் புலவரோடு, நேரில் சந்திக்காமலேயே நட்புக் கொண்டவர் என்ற கதை மூலம் நம் எல்லோருக்கும் தெரியும்.(இவரது மரணத்திற்குப் பிறகு இவரை சந்திக்க ஓடோடி வந்த இவரது நண்பர் பிசிராந்தையார், இவர் வடக்கிருந்து இறந்து போனதை கேள்விப்பட்டு, அதே இடத்திலேயே தானும் வடக்கிருந்து உயிர் நீத்தது தனிக்கதை )
சோழன் கரிகால் பெருவளத்தான் அரண்மனை!!!
போரில் பெற்ற வெற்றியை அவனது அவையில் உள்ள அனைவரும் மிகச் சிறப்பாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
அங்கே விடுவிடுவென துணிந்து வருகிறார் ஒரு பெண் புலவர். வெண்ணிக் குயத்தியார் என்பது அவர் பெயர். வந்தவர் மன்னரைப் புகழ்ந்து பாடல் பாடி கொண்டிருக்கும் புலவர்களுக்கு மத்தியில் ஒரு பாடலைப் பாடுகிறார் – நீ இந்தப் போரிலே வெற்றி பெறவில்லை,மாறாக தோற்றுவிட்டாய் என்று! அங்கிருந்த கொண்டாட்ட மனநிலை ஒரே நொடியில் முடிந்து போகிறது. ‘ என்ன இந்த பெண் புலவர் !? இப்படி ஒரு மகிழ்ச்சியான கொண்டாட்டத்தின் நேரத்தில் வந்து வெற்றிபெற்ற நம் அரசரைப் பார்த்து நீ தோற்றுவிட்டாய் என்று துணிந்து பாடுகிறாரே! இவருக்கு என்ன பைத்தியம் பிடித்து விட்டதா? என எல்லாரும் சிந்தித்துக் கொண்டிருக்க, அந்தப் புலவரோ அதற்கு விளக்கமும் கொடுக்கிறார்.
நீ போரில் வெற்றி பெற்றாய் தான்.ஆனால் உன்னுடைய வெற்றி வெறுமனே இரத்தக்கரை பிடித்த வாளின் வெற்றி! ஆனால் பெருஞ்சேரலாதன் வெற்றியோ ஆன்மாவின் வெற்றி! மானத்தின் வெற்றி! அந்த வெற்றிதான் காலம்தோறும் நிலைத்திருக்கும். உன்னுடைய வெற்றி அல்ல… முதுகில் புண்பட்ட நானும் ஒரு வீரனா?! மானம் இழந்த நான் எதற்காக உயிர் வாழ வேண்டும்!? உயிரை விட மானமல்லவோ பெரிது! என எண்ணி தானே வடக்கிருந்து உயிர் துறந்தான் அவன். நீ கொன்று அவன் சாகவில்லை என்பதை மறந்து விடாதே! போரின் வெற்றியை தான் நீ பெற்றாய்! ஆனால் மானத்தின் வெற்றியை அவன் உனக்கு விட்டுத் தரவில்லை! என்று துணிந்து எடுத்துக் கூறுகிறார்.
நல்லவரை வென்றவர்கள் தான் தோற்றுப் போகிறார்கள்! நல்லவர்கள் தோற்றாலும் வென்று விடுகிறார்கள் ! என்னும் கருத்தை ஒரு போரில் வெற்றி பெற்றவரிடம் சென்று துணிந்து அவர் சொன்னதாக, புறநானூற்றில் 66 ஆவது பாடலில், ஒரு வரலாறு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
வெண்ணிப் பறந்தலை போரின் கதையும், பெருஞ்சேரலாதன் பிசிராந்தையார் நட்பின் கதையும், தெரிந்த நமக்கு கரிகால் பெருவளத்தான் தோற்றவன் என சுட்டிக்காட்டப்பட்ட வரலாறு தெரியாது தானே!?
இதுபோல நமக்கு அடிக்கடி சொல்லப்பட்ட, நாம் ஓரளவு அறிந்திருக்கிற , நம் முன்னோர்களின் கதைகளுக்குப் பின்னால், அறியவேண்டிய, ஆர்வத்தை தூண்டக்கூடிய, சொல்லப்படாத, சுவைமிகு வரலாற்று செய்திகள் நிறைந்து கிடக்கின்றன. இலக்கிய பாடல்களை அப்படியே படிப்பதும் புரிந்து கொள்வதும் கடினம் தான். ஆனாலும், ஓடிக்கொண்டிருக்கும் இந்த அவசர உலகத்தில் இலக்கியங்களை நின்று நிதானமாக படிக்கும் அளவுக்கு நமக்கு நேரமும், தமிழ் மொழி அறிவும் இல்லை என்றாலும், குறைந்தபட்சம் இதுபோல கதை வடிவிலாவது நம்மவர்களின் நற்பண்புகளையும், பண்பாட்டுச் சிறப்பையும், பரந்துபட்ட வாழ்வியல் கூறுகளையும் நம் குழந்தைகளுக்கு இதுபோல கதைகளாகக் கூட சொல்லிச் செல்லலாமே !
தேவை எல்லாம் கொஞ்சம் தேடல்தான் !
நமது பழங்கால இலக்கியங்கள் எல்லாம், கடினமான புரியாத வார்த்தைகளைக் கொண்ட வெறும் நூல்கள் அல்ல! வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை, நம் முன்னோர்களின் வரலாற்றை புதைத்து வைத்திருக்கும் சுரங்கங்கள் அவை. அவற்றிற்கான விளக்கங்களை நூற்றுக் கணக்கில் தமிழ் அறிஞர்களும், தமிழ் ஆர்வமுடையவர்களும் இன்றைக்கும் நமக்கு கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவைகளை அவ்வப்போது அறிந்து கொள்ள கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள்!
வேண்டுதலோடு உங்கள்
ஆரா அருணா .