TamilSaaga

சிங்கப்பூரில் சர்வதேச நிறுவனத்தின் முதலீடு: 700 புதிய வேலைகள் உறுதி!

தைவானிய நிறுவனமான யுனைடெட் மைக்ரோஎலெக்ட்ரானிக்ஸ் கார்ப் (UMC) சிங்கப்பூரில் புதிய நுண்சில்லு உற்பத்தி நிலையத்தைத் திறந்துள்ளது.

சிங்கப்பூர்: முன்னணி பகுதி மின்கடத்தி (செமி கண்டக்டர்) நுண்சில்லுகளைத் தயாரிக்கும் தைவானிய நிறுவனமான யுனைடெட் மைக்ரோஎலெக்ட்ரானிக்ஸ் கார்ப் (UMC), சிங்கப்பூரில் தனது புதிய உற்பத்தி நிலையத்தை ஏப்ரல் 1ஆம் தேதி திறந்துள்ளது. பாசிர் ரிஸ் வட்டாரத்தில் அமைந்துள்ள இந்த புதிய தொழிற்சாலை மூலம் அடுத்த சில ஆண்டுகளில் சுமார் 700 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தொழிற்சாலை பல கட்டங்களாக விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இதன் முதல் இரண்டு கட்டங்களுக்காக மட்டும் US$5 பில்லியன் (S$6.7 பில்லியன்) முதலீடு செய்ய UMC நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முதல் கட்டத்தின் பெரிய அளவிலான உற்பத்தி 2026ஆம் ஆண்டில் தொடங்கவுள்ளது. இந்த ஆலையின் மூலம் UMC தனது மொத்த உற்பத்தியையும் சிங்கப்பூருக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ஒரு மில்லியன் நுண்சில்லுகளை உற்பத்தி செய்யும் திறன் பெறப்படும். மேலும், இந்த ஆலை மற்ற நிறுவனங்களுக்கு நுண்சில்லுகளை உற்பத்தி செய்து தரும் குத்தகை உற்பத்தி நிலையமாகவும் செயல்படும்.

சிங்கப்பூரில் முன்னணி MNC நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் – விண்ணப்பிக்கும் வழிகள் மற்றும் முழுமையான தகவல்!

UMC சிங்கப்பூர் பிரிவின் மூத்த இயக்குநர் தாமஸ் டே அவர்கள் ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தித்தாளிடம் பேசுகையில், தற்போதுள்ள நுண்சில்லுகளைக் காட்டிலும் அதிநவீன நுண்சில்லுகளைத் தயாரிப்பதில் இந்த புதிய சிங்கப்பூர் கிளை நிறுவனம் கவனம் செலுத்தும் என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “கைப்பேசி முதல் கார் மற்றும் தரவு நிலையங்கள் வரை அனைத்துமே நுண்சில்லுகளில் இயங்குகின்றன. இதனால் நுண்சில்லுகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் போட்டியும் கடுமையாக உள்ளது. சீனா போன்ற நாடுகளில் இருந்து வரும் போட்டிகளுக்கு மத்தியில் நிறுவனத்தை நடத்த வேண்டியுள்ளது. சிங்கப்பூரில் தயாரிக்கப்படும் நுண்சில்லுகள் அதிநவீன கைப்பேசித் திரைகளுக்கும், அடுத்த தலைமுறை தொடர்புமுறைக்கான நுண்சில்லுகளாகவும் இருக்கும்,” என்று குறிப்பிட்டார்.

UMC-ன் புதிய முதலீடு: சிங்கப்பூரில் அதிகரிக்கும் வேலை வாய்ப்புகள்!

இந்த புதிய உற்பத்தி ஆலை சிங்கப்பூரின் மின்னணுவியல் உற்பத்தித் துறைக்கு மேலும் வலு சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts