இன்றைய டிஜிட்டல் உலகில், நம் படிப்பிற்கும் திறமைக்கும் ஏற்ப வேலை தேடுவது என்பது பெரும் சவாலாக உள்ளது. இந்த சவாலை எளிமையாக்குவதற்காக, லிங்க்ட்இன் (LinkedIn) AI (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தங்களுக்கு ஏற்ற வேலைகளை மிக எளிதாகக் கண்டறியும் ஒரு கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது.
LinkedIn என்பது உலக அளவில் வேலைவாய்ப்பு தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் ஒரு பெரிய இணையதளம். பல வருடங்களாக, வேலை தேடுபவர்களுக்கும், நிறுவனங்களுக்கும் இது ஒரு முக்கியமான தளமாக இருக்கிறது. கோடிக்கணக்கானவர்கள் இதில் வேலை வாய்ப்புகளைத் தேடுகிறார்கள்.
ஆனால், வழக்கமாக LinkedIn-ல் வேலை தேடும்போது, குறிப்பிட்ட வார்த்தைகளை (Keywords) பயன்படுத்தித்தான் தேட வேண்டும். இதனால், நமக்கு என்ன வேலை தேவையோ அதை மிகவும் துல்லியமாகச் சொல்ல வேண்டும். இந்தத் தேடல் முறை, சில சமயங்களில் சிரமமாகவும், நாம் எதிர்பார்க்கும் சரியான முடிவுகளைத் தராமலும் இருக்கலாம்.
இப்போது, இந்தப் புதிய AI கருவி “இயற்கை மொழி” (Natural Language Queries) மூலம் தேடலை மேற்கொள்கிறது. அதாவது, ஒருவருடன் பேசுவது போல, உதாரணமாக “எனக்கு வங்கி துறையில், ஒரு நல்ல சம்பளத்துடன், வேலை வேண்டும்,” என்று தேடலாம். இந்த AI கருவி, நமது கேள்வியின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ற மிகச் சரியான வேலை வாய்ப்புகளைத் தேர்ந்தெடுத்துத் தரும். இது அமெரிக்காவில் மே மாத தொடக்கத்தில் அறிமுகமாகி, தற்போது இந்தியா உட்பட பல நாடுகள் பயன்படுத்துகின்றனர்
எப்படி இது வேலை செய்கிறது?
LinkedIn உருவாக்கி இருக்கும் இந்த AI கருவி, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் மெஷின் லேர்னிங் (Machine Learning) போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. இதன் மூலம், நீங்கள் வேலை தேடும்போது கேட்கும் கேள்விகளை ஆழமாகப் புரிந்துகொள்ளும். ஒரு நண்பருடன் பேசுவது போல, இயல்பான வாக்கியங்களைப் பயன்படுத்தியே வேலை தேட முடியும்.
இந்தக் கருவியின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?
1. சாதாரண மொழியைப் புரிந்துகொள்ளும்: நாம் எப்படிப் பேசுவோமோ, அதே மாதிரி சாதாரணமான மொழியில் நம்முடைய தேவைகளைச் சொல்லலாம். உதாரணத்துக்கு, “நான் சுற்றுச்சூழல் மீது ஆர்வமா இருக்கேன், எனக்கு டேட்டா அனாலிசிஸ் வேலை வேணும்” அப்படின்னு டைப் பண்ணாலே போதும்.
சில உதாரணங்கள் :
“எனக்கு வீட்டில் இருந்தே செய்யக்கூடிய மென்பொருள் வேலைகள் வேண்டும், சம்பளம் அதிகம் இருக்க வேண்டும்.”
” Data Analysis வேலை வாய்ப்புகள் எங்கே இருக்கு?
“மனித வளத் துறையில் ஐந்து வருட அனுபவம் உள்ளவர்களுக்கு பெங்களூரில் என்ன வேலைகள் இருக்கின்றன?”
நீங்கள் இப்படிச் சொல்லும் கேள்விகளின் உண்மையான அர்த்தத்தை AI புரிந்துகொள்ளும். அது நீங்கள் தேடும் வேலை, எதிர்பார்க்கும் சம்பளம், தேவைப்படும் அனுபவம், வேலை செய்யும் இடம் போன்ற எல்லா விஷயங்களையும் எடுத்துக்கொள்ளும்.
2. இந்த AI, உங்களுடைய CV, உங்களிடம் உள்ள திறமைகள், உங்களுக்கு என்ன மாதிரியான வேலைகள் பிடிக்கும்னு பார்த்து, அதற்கேத்த ரொம்ப சரியான வேலை வாய்ப்புகளை மட்டும் காட்டும்.
3. லிங்க்ட்இன் இந்தக் கருவியின் மூலம், உங்களுக்கு ரொம்பவும் பொருத்தமான வேலைகளுக்கு மட்டும் விண்ணப்பிக்க முடியும். இப்படிப் பண்ணும்போது, சம்பந்தமில்லாத வேலைகளுக்கு விண்ணப்பித்து நேரத்தை வீணடிப்பது குறையும்.
யார் பயன்படுத்தலாம்?
இந்தக் கருவி, முதலில் LinkedIn Premium சந்தாதாரர்களுக்கு (பணம் கட்டி பயன்படுத்துபவர்கள்) கொடுக்கப்பட்டது. பிறகு,கொஞ்சம் கொஞ்சமாக மற்ற எல்லாப் பயனர்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
என்ன மாற்றத்தை இது கொண்டுவரும்?
கணினி அல்லது தொழில்நுட்பம் பற்றி அதிகம் தெரியாதவர்களும் லிங்க்ட்இன் தளத்தை எளிதாகப் பயன்படுத்த முடியும். உதாரணத்துக்கு, ஒரு கிராமப்புற இளைஞர், “நல்ல சம்பளம் தரக்கூடிய, சென்னையில் இருக்கிற ஒரு வேலை” என்று சாதாரணமாகத் தேடினால்கூட, இந்த AI அவருக்குப் பொருத்தமான வேலைகளைக் காட்டிக் கொடுக்கும்.
தற்போதைய வேலையில் இருந்து வேறு துறைக்கு மாற விரும்புவோர், தங்கள் ஆர்வங்களை வெளிப்படுத்தி, புதிய வாய்ப்புகளை எளிதாகக் தேடலாம். உதாரணமாக, “நான் ஐடி-ல இருக்கேன், ஆனா மார்க்கெட்டிங் வேலை பாக்க விரும்பறேன்” என்று தேடலாம்.
AI கருவியின் நன்மைகள்… சில சவால்களும்!
இந்த AI கருவி, வேலை தேடும் விதத்தில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும், சில சவால்களும் இருக்கின்றன:
1. தகவல் பாதுகாப்பு (Data Privacy): AI கருவிகள் நாம் கொடுக்கும் தகவல்களைப் பயன்படுத்துவதால், நமது தனிப்பட்ட விவரங்கள் பாதுகாப்பாக இருக்குமா என்ற கேள்வி எழலாம்.
2. மொழி ஆதரவு (Language Support): இப்போதைக்கு இந்த கருவி ஆங்கிலத்தில் மட்டுமே வேலை செய்கிறது. இந்தியா போன்ற பல மொழிகள் பேசும் நாடுகளில், தமிழில் அல்லது மற்ற உள்ளூர் மொழிகளில் இதை பயன்படுத்தும் வசதி வந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
3. துல்லியம் (Accuracy): AI காட்டும் முடிவுகள் எப்போதும் 100% சரியாக இருக்க வேண்டும். இல்லையென்றால், வேலை தேடுபவர்கள் தேவையில்லாத வாய்ப்புகளை நோக்கிச் செல்ல வாய்ப்புள்ளது.
LinkedIn-இன் இந்த புதிய AI கருவி, நீங்கள் வேலை தேடும் முறையையே மாற்றி அமைக்கிறது. இது ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் உதவக்கூடிய வகையில், வேலை தேடும் அனுபவத்தை நவீனப்படுத்துகிறது. இனி, ஒரு கிளிக்கில் அல்லது நீங்கள் கேட்கும் ஒரு எளிய கேள்வி மூலம், உங்கள் கனவு வேலையை அடைய இது ஒரு புதிய வழியாகும்.
சிங்கப்பூரில் வேலை இழந்தாலும் கவலை வேண்டாம்.. சிங்கப்பூர் அரசின் இந்தத் திட்டம் உங்களுக்குத்தான்!