வரலாற்றிற்கும்,கதைகளுக்கும் பேர் போன நாடு தான் இந்தியா. அதிலும் குறிப்பாக வட மாநிலங்களை எடுத்துக் கொண்டால் புராணக் கதைகளான மகாபாரதம் முதல் இராமாயணம் வரை ஏராளமான கதைகள் இங்கு பிறந்ததுண்டு. மேலும் மன்னர் படையெடுப்புகளால் சுவாரசியமாக நடந்த பல சம்பவங்கள் திரைப்படங்களாக வந்துள்ளன. ஆனால் ராஜஸ்தான் மாநிலத்தில் நிஜத்திலேயே நடந்த மர்ம சம்பவத்தால் ஒட்டுமொத்த கிராமமே ஒரே இரவில் காலியான வரலாற்று சம்பவத்தை பற்றி தான் இப்பொழுது நாம் பார்க்க போகின்றோம்.
ராஜஸ்தானில் பேய் கிராமம் என்று அழைக்கப்படும் இந்த கிராமத்திற்கு இரவு நேரங்களில் மட்டுமல்லாமல் பகல் நேரங்களிலும் மக்கள் செல்ல அஞ்சுவதுண்டு. குல்தாரா எனப்படும் இந்த கிராமத்தில் மக்கள் வாழ்ந்ததற்கு அறிகுறியாக உடைந்த சுவர்கள் மற்றும் வீடுகளை மட்டுமே பார்க்க முடியும். ஆனால் தற்பொழுது இங்கு யாரும் வசிக்கவில்லை.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்த கிராமமானது செல்வ செழிப்பாக இருந்தது என்றும், ஆனால் வறட்சி மற்றும் அப்பொழுது பிரதம மந்திரி ஆக இருந்த சலீம் சிங் விதித்த அதிகப்படியான வரியின் காரணமாக மக்கள் வேறு வழியில்லாமல் அந்த கிராமத்தை விட்டு வெளியேறினர் என்றும் கூறப்படுகின்றது. ஆனால் மற்றொருபுறம் மற்றொரு மர்ம கதையும் இதற்கு உண்டு. 300 ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்தில் பாலிவால் அந்தணர் எனப்படும் சமூகம் வசித்து வந்ததாக கூறப்படுகின்றது. அந்த சமயத்தில் இந்த சமூகத்தின் தலைவரின் மகள் மிக அழகுடன் இருந்ததாகவும் அவரின் மீது சலீம் சிங் ஆசை கொண்டு வலுக்கட்டாயமாக திருமணம் செய்ய விரும்பினார் எனவும் கூறப்படுகின்றது.
அதனை யாரேனும் தடுக்க முயன்றால் அவர்கள் கொல்லப்படுவார்கள் என்று மிரட்டி விட்டும் சென்றுள்ளார். இதனால் சுற்றுவட்டாரத்தில் இருந்த 85 கிராமங்கள் கூட்டம் கூடி ஒரே இரவில் கிராமத்தை விட்டு சென்றதாக நம்பப்படுகின்றது. மேலும் வெளியேறும் போது அவர்கள் தங்களுடன் அவர்கள் வைத்திருந்த உடமைகள் எதையும் எடுத்துச் செல்லாமல் வெறும் காலுடன் நடந்து சென்றதாக கூறப்படுகின்றது. மேலும் அப்படி சென்றவர்கள் இந்த கிராமத்தில் இதற்கு மேல் யாரும் வாழ முடியாது என்று சாபம் விட்டு சென்றுள்ளதாக வரலாறு கூறுகின்றது. மேலும் அப்படி ஊரை விட்டு கிளம்பிய பிராமணர்கள் மாயமானார்கள் எனவும், அவர்கள் காற்றில் கரைந்தனர் எனவும் கூறப்படுகின்றது.
இதைப் பற்றிய பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டதில் பாலிவால் பிராமணர்கள் எனப்படும் சமூகம் வாழ்ந்ததற்கான அடையாளங்களை இல்லை எனவும் கூறப்படுகின்றது. எனவே இந்த தீர்க்க முடியாத மர்மத்தின் காரணமாக மக்கள் அந்த கிராமத்தின் பக்கமே செல்ல அஞ்சுகின்றனர் எனவும் பல நூற்றாண்டுகளாக அந்த கிராமத்தில் மக்கள் நடமாட்டமே இல்லை எனவும் கூறப்படுகின்றது. மக்கள் வாழாமல் இன்றளவும் வெறிச்சோடி இருக்கும் இந்த கிராமத்தை பற்றிய கதையானது இப்பொழுதும் மர்மமாகவே உள்ளது.