உண்மையில் இது ‘வாவ்!’ சொல்ல வைக்கும் திட்டம் தான். ஆனால்…..
ஆனால் என்ன? அதைப் பற்றி கடைசியா பேசலாம்.. இப்போ முதல்ல உள்ள விஷயத்தை பார்த்துடலாம். சென்னை விமான நிலையம் வரும் பயணிகளுக்கு இயற்கையான சூரிய ஒளி மற்றும் காற்றோட்ட வசதிகள் கூடுதலாக கிடைக்கும் வகையில், சென்னை விமான நிலையத்தில் அதிநவீன “ஸ்கைலைட்” (Skylight) வசதி அமைக்கப்படுகிறது. சென்னை ஏர்போர்ட்டில் முதல் முறையாக இந்த சிஸ்டம் கட்டமைக்கப்படுகிறது.
முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் 2,400 கோடி ரூபாய் செலவில், கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட உள்நாடு மற்றும் சா்வதேச முணையங்களை இணைத்து ஒருங்கிணைந்த அதிநவீன, புதிய விமான முனையங்கள் கட்டும் பணி தற்போது முடியும் தருவாயில் உள்ளது.
2.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்படும் இந்தப் புதிய முனையங்களின் பணி பெருந்தொற்று பாதிப்பு, லாக்டவுன், நிலங்கள் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம், கட்டுமான பொருட்கள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தாமதமடைந்துள்ளது. இருப்பினும், இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் அனைத்தும் நிறைவுறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த சில ஆண்டுகளில் சென்னை ஏர்போர்ட்டில் வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கை 3.5 கோடியாக அதிகரிக்கும் என்பதால், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஒருங்கிணைந்த புதிய முனையம் கட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தரை தளத்தில் சர்வதேச வருகை பயணியருக்கான வழக்கான நடைமுறைகளும், இரண்டாவது தளத்தில் பயணியருக்கான புறப்பாடு நடைமுறைகள் மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி, இந்த புதிய அதிநவீன முணையத்தில் மொத்தம் 5 தளங்கள் உள்ளன. அதில், பயணிகள் ஓய்வு அறைகள், விவிஐபிகள் தங்கும் அறைகள், ஷாப்பிங் மால்கள் உட்பட பல வசதிகள் இதில் இடம்பெறுகின்றன.
இந்த நிலையில் தான் சென்னை ஏர்போர்ட்டில் ‘ஸ்கைலைட்’ எனும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது, இந்த ஸ்கைலைட் மூலம் ஏர்போர்ட்டில் அதிகளவு சூரிய ஒளி வெளிச்சம் நேரடியாக வீசும். அதற்கேற்ப இவை பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. 6 மீட்டர் வட்ட வடிவில், 10-க்கும் மேற்பட்ட ஸ்கைலைட் சிஸ்டம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
சூரிய வெளிச்சம் நேரடியாக உள்ளே வந்தால், வெப்பம் அதிகமாக இருக்குமே? என்ற கவலை வேண்டாம். ஸ்கைலைட் மூலம், சூரிய வெளிச்சம் மட்டுமே உள்ளே வரும். வெப்பத்துடன் கூடிய புற ஊதாக் கதிர்கள் உள்ளே நுழைவதை இந்த ஸ்கைலைட் தடுத்துவிடும். இவை சூரிய ஒளியை Filter செய்து,வெளிச்சத்தை மட்டும் உள்ளே அனுப்பும். ஆனால், வெப்பம் தடுக்கப்பட்டுவிடும்.
சரி இதனால் என்ன பயன் என்கிறீர்களா? இந்த புதிய சிஸ்டம் மூலம் அதிநவீன முணையங்கள் நல்ல வெளிச்சத்துடனும், இயற்கையான காற்றோட்ட வசதியுடனும் இருக்கும். அதே நேரத்தில் மின்சார செலவும் குறையும் என்கின்றனர் அதிகாரிகள். 2023 தொடக்கத்தில் அனைத்து பணிகளும் நிறைவுற்று முழுமையாக இவை பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சூப்பர் திட்டம்ல.. யெஸ்..! ஆனால்…. இதில் நமக்கு எழும் கேள்விகள் என்னவெனில், ஏற்கனவே பல் நூறு முறை விமான நிலைய கூரை கண்ணாடிகள் விழுந்து கொண்டிருப்பது தடுக்கப்பட்டுவிட்டதா? அதை ஒரு முக்கிய காட்சியாக வைத்து ‘மாநாடு’ படமே எடுத்துவிட்டார்கள். இருக்கின்ற குறைகளை நிவர்த்தி செய்துவிட்டு, இதுபோன்ற புதிய திட்டங்களை அமல்படுத்தலாமே என்ற குரல்களையும் நாம் கேட்க முடிகிறது.