மூளைச்சாவு அடைந்து விட்டால் அவர்களின் உறுப்புகளை தானமாக வழங்கும் பல பெற்றோர்கள் நம் நாடுகளில் இருக்கின்றார்கள். இன்னும் சொல்ல போனால் இந்திய அளவில் உறுப்பு தானம் செய்வதில் தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் உறுப்பு தானம் வழங்குபவர்களின் தியாகத்தை பாராட்டி தமிழக அரசு சிறப்பான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
அதாவது உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் உடல்கள் இனி அரசு மரியாதை படி அடக்கம் செய்யப்படும் என்ற அறிவிப்பினை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் ஆபத்தான காலகட்டங்களிலும், மற்றவர்கள் நலன்களை பெரிதாய் மதித்து உறுப்புகளை தானமாக அளிக்கும் பெற்றோர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையிலும், உறுப்புகளை தானமாக அளித்தவர்களின் உடலுக்கு மரியாதை அளிக்கும் வகையிலும் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பொதுவாக ஒருவர் மூளைச்சாவடைந்து விட்டால் அவர்களின் குடும்பம் எந்த நிலைமையில் இருக்கும் என நாம் உணர முடியும். இந்நிலையில் அந்த காலகட்டத்திலும் மற்றவர்களின் உயிருக்காக தியாகம் மனப்பான்மையுடன் செயல்படும் நல்ல உள்ளங்களுக்காக இந்த முடிவு அறிவிக்கப்படுவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பலரும் தமிழக முதல்வரின் இந்த அறிவிப்பை பாராட்டிய வண்ணம் உள்ளனர்.