துரித உணவுகளின் ஆதிக்கம் உலக அளவு பல நாடுகளில் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும். இந்த தொற்று நோய் காலத்தில் பண்டைய உணவு முறைக்கு மக்கள் பெரிய அளவில் திரும்பிய அதேநேரத்தில் இந்த துரித உணவுகள் மீதுள்ள மோகமும் இன்னும் குறையவில்லை என்று தான் கூறவேண்டும்.
இந்நிலையில் அண்டை நாடான இந்தியாவில் உள்ள கேரளாவைச் சேர்ந்த 16 வயது சிறுமி, உள்ளூர் உணவகம் ஒன்றில் Shawarma சாப்பிட்டதில், “உணவு விஷமாகி” அதனால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்ஹாங்காடு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அந்த இளம் பெண்ணின் உயிர் பிரிந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த ஷவர்மா சாப்பிட்ட மேலும் 18 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து குறிப்பிட்ட அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
தேவானந்தா என்ற அந்த 16 வயது இளம் பெண் இறந்த செய்தி கேள்விப்பட்டது, shawarma விற்று வந்த அந்த கடையை அப்பகுதி மக்கள் கற்கள் வீசி தாக்கியுள்ளனர். மேலும் அந்த ஹோட்டல் பயன்படுத்திய ஒரு 4 சக்கர வாகனத்தையும் தீ வைத்து எரித்துள்ளனர்.
இந்நிலையில் தேவானந்தாவின் மருத்துவ பரிசோதனையில் அவர் உட்கொண்ட உணவில் ‘ஷிகெல்லா’ என்ற பாக்டீரியா இருந்தது தான் காரணம் என்றும் கூறப்படுகிறது.
ஷிகெல்லோசிஸ் என்றும் அழைக்கப்படும் ஷிகெல்லா தொற்று, மனிதனின் செரிமான அமைப்பை பாதிக்கும் ஒரு நோய். இந்த பாக்டீரியா மூலம் பாதிக்கப்பட்டால் இரத்தம் கலந்த வயிற்றுப்போக்கை ஏற்படுத்துகிறது. சோப்பு மற்றும் தண்ணீருடன் உங்கள் கைகளை அடிக்கடி கழுவுவது இந்த நோய்த்தொற்று பரவாமல் தடுக்க வழிவகுக்கும்.
சுகாதாரமற்ற உணவுகள் மூலம் இது பரவுகிறது, என்பது குறிப்பிடத்தக்கது, இந்தியா மட்டுமல்ல நமது சிங்கப்பூர் உள்பட பல நாடுகளில் இந்த பாக்டீரியா சம்மந்தப்பட்ட வழக்குகள் பதிவாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகவே மக்கள் சுகாதாரமற்ற இடங்களில் இருந்து உணவுகளை வாங்கி உண்பதை தவிர்க்க வேண்டும். வெளியில் சென்று வந்தால் உங்கள் கைகளை சோப்பால் கழுவுங்கள், நிச்சயம் அது பல வியாதிகளை நம்மிடம் அண்டவிடாமல் பாதுகாக்கும்.