பெங்களூரு: ஐந்து வயது மகளின் தங்கச் சங்கிலியை இண்டிகோ விமானப் பணிப்பெண் திருடிவிட்டதாக பிரியங்கா முகர்ஜி என்ற பெண் புகார் அளித்துள்ளார். சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், இண்டிகோ விமானப் பணிப்பெண் அதிதி அஸ்வினி சர்மா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பிரியங்கா முகர்ஜி தனது இரண்டு மகள்களுடன் (வயது 5 மற்றும் 2) ஏப்ரல் 1 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து கொல்கத்தாவுக்கு பெங்களூரு வழியாக இண்டிகோ 6E 661 விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். விமானத்தில் அவரது இரண்டு மகள்களும் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது விமானப் பணிப்பெண் உதவி செய்வதாகக் கூறி, மூத்த மகளை அமைதிப்படுத்த அவரிடம் கொடுக்கும்படி பிரியங்கா முகர்ஜியிடம் கேட்டார். தாய் இளைய குழந்தையைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, விமானம் தரையிறங்கும் நேரத்தில் விமானப் பணிப்பெண் குழந்தையை பிரியங்கா முகர்ஜியிடம் திருப்பி ஒப்படைத்தார்.
டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் பிரியங்கா கூறுகையில், தனது மகள் அணிந்திருந்த சுமார் 20 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலி காணாமல் போனதை அவர் கவனித்தார். அதிதியிடம் சங்கிலி குறித்து கேட்டபோது, அவர் அதை எடுக்கவில்லை என்று மறுத்துவிட்டார். இதையடுத்து, பிரியங்கா முகர்ஜி மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை, இண்டிகோ மற்றும் விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “பெங்களூருவில் தரையிறங்கியது முதல் மதியம் வரை, எனக்கு யாரிடமிருந்தும் சரியான பதில் கிடைக்கவில்லை. விமானத்தில் சம்பவம் நடந்ததால், விமான நிறுவனம் மற்றும் காவல்துறையினருடன் நான் தான் பேச வேண்டும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். நான் புகார் அளிக்க முயன்றேன். போலீசார் விமான நிறுவனத்திடம் பேசியபோது, அவர்கள் அதிதியை போலீசாரிடம் பேச வைக்கவில்லை. அதிதி குற்றச்சாட்டை மறுப்பதாக அவர்களின் அலுவலகம் போலீசாருக்குத் தெரிவித்தது. சம்பவத்தை உறுதிப்படுத்த சிசிடிவி காட்சிகள் இல்லை என்றும் அவர்கள் கூறினர்.”
இந்த சம்பவம் குறித்து இண்டிகோ கூறுகையில், “திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூருவுக்குச் சென்ற 6E 661 விமானத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் சம்பந்தப்பட்ட ஒரு சமீபத்திய சம்பவம் குறித்து எங்களுக்குத் தெரியும். எங்கள் வாடிக்கையாளர் ஒருவர் கவலை தெரிவித்திருக்கிறார்.
நாங்கள் இதுபோன்ற விஷயங்களை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம், மேலும் விசாரணைகளை மேற்கொள்வதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கி வருகிறோம்.” இருப்பினும், அதிகாரிகள் கவனமாக விசாரித்து வருவதால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.