TamilSaaga

ஒர்க் பெர்மிட்டில் சிங்கப்பூர் அரசு கொண்டு வந்திருக்கும் புது மாற்றம்… இனி நூற்றுக்கணக்கான இந்தியர்களுக்கு எளிதாக வேலை கிடைக்க வாய்ப்பு!

சிங்கப்பூரில் இதுவரை ஏழு துறையை சார்ந்தவர்களுக்கு மட்டுமே ஒர்க் பர்மிட் வழங்கப்பட்டு வந்த நிலையில் தூய்மை பணியாளர்களும், லக்கேஜ் தூக்குபவர்களுக்கும் வழங்கப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி முதல் இந்த விதிமுறை அமலுக்கு வரும் என்றும் மேலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நாடுகளைத் தவிர கூடுதலாக பல நாடுகளில் இருந்தும் ஊழியர்களை பணிக்கு அமர்த்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் சுற்றுலா துறையை பொறுத்தவரை கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு மூன்று மடங்கிற்கும் மேலாக பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டு 2.23 மில்லியன் பயணிகள் மட்டுமே வந்திருந்த நிலையில் இந்த ஆண்டு சுற்றுலாவிற்காக வந்த பயணிகளின் எண்ணிக்கை 7.7 மில்லியனை தாண்டியுள்ளது.

அதே சமயம் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பொழுது, பொது இடங்கள் மற்றும் ஹோட்டல்களில் சுத்தம் செய்வதற்கு தேவையான தூய்மை பணியாளர்களின் எண்ணிக்கையும் அதிகமாக தேவைப்படுகின்றது. ஆனால் அவற்றிற்கு பற்றாக்குறை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதால் விருந்தோம்பல் துறை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என சிங்கப்பூர் ஹோட்டல்கள் சங்க நிர்வாக இயக்குனர் தெரிவித்து இருந்தார். இதனை ஒட்டி சிங்கப்பூர் பயணத்துறை கழகத்துடன் ஏற்பட்ட ஆலோசனையை அடுத்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. வீட்டு பணியாளர்களை பொருத்தவரை சீனா, மலேசியா, ஹாங்காங், மக்காவ், தென்கொரியா மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் இருந்து மட்டுமே ஊழியர்களை தூய்மைப் பணிகளுக்கு முதலாளிகள் வேலைக்கு அமர்த்த முடியும்.

ஆனால் செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து இந்தியா உள்ளிட்ட பங்களாதேஷ், மியான்மர், பிலிப்பைன்ஸ், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்தும் ஒர்க் பர்மிட் ஊழியர்களை வேலைக்கு அமர்த்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மாத சம்பளமும் குறைந்தபட்சம் 2000 வெள்ளி வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒர்க் பர்மிட் வழங்கப்படும் இந்த ஒன்பது வகையான பணிகளுக்கு S-pass வழங்கப்படலாம் எனவும் அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே சிங்கப்பூரில் உள்ள இந்திய உணவகங்கள் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் மூடப்பட்டு வந்த நிலையில், வெளிநாட்டினரை கருத்தில் கொண்டு இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஒர்க் பெர்மீட்டுகளில் ஊழியர்களை பணிக்கு அமர்த்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில் தூய்மை பணியாளர்களுக்கும் இந்தியாவிலிருந்து ஒர்க் பர்மிட்டுகளை அனுமதிக்கலாம் என்ற ஆணையானது இந்தியாவில் இருக்கும் பலருக்கு சிங்கப்பூரில் வேலை வாய்ப்புக்கு வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts