TamilSaaga

விழுந்து நொறுங்கிய விமானம்; ஒரு விமானி பரிதாபமாக உயிரிழந்தார்!

Gujarat Plane Crash: குஜராத் மாநிலம் ஜம்நகர் மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 3) இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் ஒன்று திறந்த புல்வெளியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த விமானிகளில் ஒருவர் பலத்த காயமடைந்து உயிரிழந்ததாக விமானப்படை தெரிவித்துள்ளது.

விபத்துக்குள்ளான விமானம் ஜாகுவார் ரக போர் விமானம் ஆகும். இது பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது நேற்று புதன்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் சுவர்டா கிராமத்திற்கு அருகே உள்ள புல்வெளியில் விழுந்து நொறுங்கியது. விமானம் விழுந்த சத்தம் கேட்டதும், அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கும், அவசர சேவைப் பணியாளர்களுக்கும் தகவல் அளித்தனர். விரைந்து வந்த அதிகாரிகள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

விமானத்தில் இருந்த மற்றொரு விமானி தக்க சமயத்தில் வெளியேறியதால் உயிர் தப்பினார். அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்று விமானப்படை தெரிவித்துள்ளது.

இந்த துயர சம்பவத்திற்கு இந்திய விமானப்படை ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளதுடன், உயிரிழந்த விமானியின் குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளது. விமானம் திறந்த புல்வெளியில் விழுந்ததால் பொதுமக்கள் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்துக்கான காரணம் என்னவென்று கண்டறிய உயர் மட்ட விசாரணைக்கு இந்திய விமானப்படை உத்தரவிட்டுள்ளது. விசாரணை முடிவில் விபத்துக்கான முழு காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, கடந்த மே 2023 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் எம்ஐஜி-21 ரக போர் விமானம் ஒன்று ஹனுமன்கார்ஹ் கிராமத்தில் ஒரு வீட்டின் மீது விழுந்து விபத்துக்குள்ளானதில் பொதுமக்கள் மூவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தற்போது குஜராத்தில் நிகழ்ந்துள்ள இந்த விபத்து விமானப்படை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கப்பூரில் முன்னணி MNC நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் – விண்ணப்பிக்கும் வழிகள் மற்றும் முழுமையான தகவல்!

Related posts