இந்தியாவில் உள்ள கேரளா மாநிலத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் மகன் ஷாரோன் ராஜ். வயது 23. இவர் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி ரேடியோலஜி இறுதியாண்டு படித்து வந்திருக்கிறார்.
இவருக்கும் களியக்காவிளை அடுத்த ராமவர்மன்சிறை எனும் பகுதியில் எம்.ஏ படித்துவந்த கிரீஷ்மா (22) என்ற பெண்ணுக்கும் காதல் இருந்து வந்துள்ளது.
இவ்விருவரின் காதல் விவகாரம், கிரீஷ்மாவின் குடும்பத்துக்கு தெரிய வந்த நிலையில், ராணுவ வீரர் ஒருவருக்கும் கிரீஷ்மாவுக்கும் அவசர அவசரமாக திருமண ஏற்பாடுகள் நடந்தன. நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது.
இதில் கிரீஷ்மாவும் மனம் மாறி, ராணுவ வீரரை திருமணம் செய்து கொள்ள நினைத்து, ஷாரோனுடன் பழகுவதை தவிர்த்துள்ளார். ஆனால், காதலியை மறக்க முடியாமல் தவித்து வந்த ஷாரோன், இருவரும் காதலித்த போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை டெலிட் செய்ய மறுத்திருக்கிறார்.
தனது ஜாதகப்படி முதல் கணவர் இறந்து விடுவார் என்றும் அதன் பிறகு நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று அவரை கழற்றிவிட என்னென்னமோ முயற்சி செய்து பார்த்திருக்கிறார் கிரீஷ்மா. ஆனால், ஷாரோன் அதையும் நம்பவில்லை. ‘இதுபோன்ற மூடநம்பிக்கையை நம்பாதே’ என்று காதலிக்கு அறிவுரை கூறியிருக்கிறார்.
இதனால், தனது காதலனால், ராணுவ வீரருடனான வாழ்க்கை பாதிக்கப்படலாம் என்று நினைத்த கிரீஷ்மா, கடந்த மாதம் 14ம் தேதி அவரை தனது வீட்டிற்கு வர வைத்துள்ளார். ரெஜின் என்ற நண்பருடன் காதலி வீட்டிற்கு ஷாரோன் சென்றுள்ளார். அப்போது, ரெஜினை வீட்டுக்கு வெளியே இருக்க சொல்லிவிட்டு, ஷாரோனை மட்டும் வீட்டிற்குள் அழைத்துச் சென்று, தான் வழக்கமாக குடிக்கும் கஷாயத்தை கொடுத்து குடிக்கச் சொல்லி இருக்கிறார்.
அந்த கஷாயத்தில் காபிக் என்ற பூச்சி மருந்தை கலந்த கிரீஷ்மா, தனது காதலனிடம் ‘இந்த கஷாயம் ரொம்ப கசக்கும்.. உன்னால் முடிந்தால் குடித்து காட்டு பார்ப்போம்’ என்று கூறி சவால் விட்டிருக்கிறார். ஆனால், எதுவும் அறியாத ஷாரோன், காதலியின் சவாலை ஏற்றுக் கொண்டு, இரண்டே மூச்சில் கஷாயத்தை குடித்து விட்டு, நண்பருடன் அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார்.
பிறகு, சில நிமிடங்களில் வாந்தி எடுத்த ஷாரோன் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அதற்கும் அந்த விஷம் உடல் முழுவதும் பரவி, ஒவ்வொரு உறுப்புகளாக செயலிழக்க வைத்துவிட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ஷாரோன், கடந்த அக்.25ம் தேதி பரிதாபமாக பலியானார்.
இந்த வழக்கை விசாரித்து வரும் காவல்துறை அதிகாரி, ஷாரோனிடம் கடைசி நேர மரண வாக்குமூலத்தை பெற்றிருக்கிறார். அதில், தனது காதலி எனக்கு விஷம் கலந்திருக்க மாட்டார் என்று ஷாரோன் கூறியதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். மரண படுக்கையிலும், காதலி தனக்கு துரோகம் செய்திருக்க மாட்டார் என்று நம்பிய ஷாரோன்ராஜ், கிரீஷ்மா தனக்கு சாதாரண கஷாயம் மட்டுமே கொடுத்தார் என்று கடைசி வரை கூறியிருக்கிறார். கடைசியில் இறந்துவிட்டார்.
ஷாரோன்ராஜ் சிகிச்சையில் இருந்த போதும், அவரது குடும்பத்தினர் உன்னுடைய காதலி தான் உனக்கு விஷம் கொடுத்துள்ளார் என்று கூறியும், அதனை முற்றிலும் மறுத்த ஷாரோன், அவள் அப்படி செய்திருக்க வாய்ப்பே இல்லை என சொல்லியிருக்கிறார்.
எனினும், கிரீஷ்மாவை கைது செய்த கேரள போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையில், காதலனுக்கு தன் கையாலேயே விஷம் கொடுத்ததை ஒப்புக் கொண்டுள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வந்த நிலையில், பாத்ரூம் போயிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு போனவர், அங்கிருந்த ஃபினாயிலை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றதால், அவர் இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.