ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், ஏர் இந்தியா விமான நிறுவனத்தை கடுமையாக விமர்சித்து, “எவ்வளவு நேரம் தான் விமானத்தில் இப்படியே காத்திருக்கிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் பதறிப்போன ஏர் இந்தியா நிறுவனம், அவரிடம் மன்னிப்பு கோரியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பின்னணியில் உள்ள காரணம் மற்றும் விமானத்தில் நடந்தவை குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
டேவிட் வார்னர், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரராவார். டேவிட் வார்னர் தற்போது சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ளார். ‘ராபின் ஹுட்’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படத்தை வெங்கி குடுமுலா இயக்கியுள்ளார், மேலும் நிதின் மற்றும் ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் மார்ச் 28, 2025 அன்று வெளியாக உள்ளது. படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி மார்ச் 24, 2025 அன்று மாலை 5 மணிக்கு ஹைதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காகவே டேவிட் வார்னர் ஹைதராபாத் வந்தடைந்தார்.
இந்நிலையில், பெங்களூருவில் இருந்து ஹைதராபாத் செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் பயணித்தபோது, அவர் அதிக நேரம் காத்திருக்க வைக்கப்பட்டதாக கோபத்தை வெளிப்படுத்தினார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “நாங்கள் விமானி இல்லாத விமானத்தில் ஏற்றப்பட்டோம். மணிக்கணக்கில் காத்திருக்கிறோம். விமானி இல்லை என்று தெரிந்தும் ஏன் பயணிகளை விமானத்தில் ஏற்றுகிறீர்கள்?” என்று ஏர் இந்தியாவை டேக் செய்து விமர்சித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த ஏர் இந்தியா நிறுவனம், “பெங்களூரில் மோசமான வானிலை நிலவியதால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால் பல விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. வார்னரின் விமானத்தை இயக்க வேண்டிய குழுவினர் மற்றொரு பணியில் சிக்கியிருந்ததால் தாமதம் ஏற்பட்டது. இதற்காக வருத்தம் தெரிவிக்கிறோம்” என்று விளக்கம் அளித்து, அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.
இந்த சம்பவம், பெங்களூருவின் சவாலான வானிலை மற்றும் விமான நிறுவனத்தின் இயக்க சிக்கல்களால் ஏற்பட்டது என்பது தெளிவாகிறது. டேவிட் வார்னரின் விமர்சனம் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
மொபைல் எண் எச்சரிக்கை: வங்கி மற்றும் யுபிஐ பயனர்களுக்கு முக்கிய தகவல்!