TamilSaaga

சிங்கப்பூர் Dormitory வாசிகளுக்கு ஒரு சின்ன Health Tips..! Beat The Heatuu!

நீங்கள் சிங்கப்பூர் Dormitory போன்ற பொதுவான தங்குமிடத்தில் இருந்து பணிபுரிகிறீர்களா? குடும்பத்திலிருந்து பிரிந்து விடுதி போன்ற இடங்களிலோ அல்லது தனி வீடுகளிலோ தங்கி பணிபுரிகிறீர்களா? அப்போ உங்களுக்கானது தான் இந்தப் பதிவு. உங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு ஒரு சின்ன டிப்ஸ்…!

தற்பொழுது உள்ள காலகட்டத்தில் அனைவருக்கும் மிக சாதாரணமாக ஏற்படுவது உடல் உஷ்ணம். உடலில் வழக்கமாக இருக்கும் வெப்பநிலை அதிகரிப்பது. இதனால் உடலில் பல பின் விளைவுகள் ஏற்படும். கண் எரிச்சல், சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை, பைல்ஸ் போன்ற ஏராளமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் அந்த உடல் சூட்டினை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம்.

அன்றாடம் வெயிலில் வேலை, தொடர்ந்து பயணிப்பது, வெப்பமான இடங்களில் பணிபுரிவது, முறையற்ற உணவு முறை ஏன் நாள்முழுக்க AC அறையில் இருப்பது கூட உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தும். உடல் சூட்டைத் தனித்து அதனை சமநிலையில் வைத்திருக்க ஏராளமான வழிகள் உண்டு. 

மோர், இளநீர், சர்பத், ஜூஸ் போன்ற பானங்களை அருந்துவது மற்றும் உடல் சூட்டைத் தணிக்க கூடிய உணவுகள், இயற்கை மருந்துகள் போன்றவை இதற்க்கு உதவும். இருப்பினும் உடலுக்கு வெளியில் இருந்து உஷ்ணத்தைத் தணிக்க மிகச்சிறந்த வழியாக காலம் காலமாய் பின்பற்றி வரும் முறை தான் எண்ணெய்க் குளியல். 

அதுக்கெல்லாம் எங்க நேரம் இருக்கு-னு யோசிக்காதீங்க. ஆரோக்கியத்துக்காக நேரம் செலவிடுறதுல தப்பில்ல. அது அத்தியாவசியமும் கூட…! பல காலமாய் பின்பற்றி வந்த எண்ணைக்குளியல் முறை தற்பொழுது தீபாவளி சடங்கா மட்டும் மாறியிருக்கு ஆனால் அதோட  மகத்துவம் பலருக்கு புரிவது இல்லை.

உடல் உஷ்ணத்தை தணிப்பதோடு மட்டுமல்லாமல் உங்கள் சருமத்திற்கும் ஆரோக்யத்தைக் கொடுக்க கூடியது தான் இந்த எண்ணெய்க் குளியல். அது எப்படி செய்ய வேண்டும் எத்தனை முறை குளிக்க வேண்டும்? 

எண்ணெய்க் குளியலுக்கு சில முறைகள் உண்டு புதியதாக எண்ணெய் வைத்து குளிப்பவர்களுக்கு உடல் சோர்வு, சளி, லேசான காய்ச்சல், தலைவலி போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உடல் சட்டென குளிர்வதால் இது போன்ற விளைவுகள் ஏற்படுவது இயல்புதான். ஆனால் அதனையும் முறையாகக் கையாண்டால் இந்த பிரச்சனைகளையும் தவிர்க்கலாம்.

முதலில் எந்தெந்த நாட்கள் எண்ணெய்க் குளியலுக்கு சிறந்தவை என்று பாப்போம்.

ஆண்களுக்கு புதன் மற்றும் சனிக் கிழமைகளும், பெண்களுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளும் எண்ணெய்க் குளியலுக்கு நல்லது. 

நான்கு நாட்களுக்கு ஒரு முறை எண்ணெய்க் குளியல் எடுப்பது சிறந்தது. கோடைக் காலங்களில் வாரம் இரு முறையும், குளிர்காலங்களில் வாரம் ஒரு முறையும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம். 

உடல் முழுவதும் எண்ணெய் பூசிக் குளிப்பது மிகவும் நல்ல பயன்களைத் தரும். முடியாவிட்டால் தலைக்காவது எண்ணெய் வைத்து குளிக்க வேண்டும். எண்ணெய் வைத்தவுடன் குளிக்கக் கூடாது, குறைந்தது இருபது முதல் 30 நிமிடங்கள் வரை பொறுத்திருந்து குளிப்பது தான் சிறந்தது. 

குளிக்கும் பொழுது சாதாரண ஷாம்பூ மற்றும் சோப்புகள் பயன்படுத்தினால் உடலில் உள்ள எண்ணெய்ப் பிசுக்கை முழுமையாக நீக்குவது சற்று கடினம். அதற்கான சிறந்த தீர்வு சீயக்காய். முடிக்கு சீயக்காய் மற்றும் உடலுக்கு சீயக்காய் மற்றும் கடலை மாவு பயன்படுத்தலாம். அப்படிப் பயன்படுத்தும் பொழுது முடி மற்றும் உங்கள் சருமம் ஆரோக்கியமாக இருக்கும். 

எண்ணெய்க் குளியலின் பொழுது கருத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கிய விஷயம் எந்தத் தண்ணீரில் குளிக்க வேண்டும் என்பது..! அதாவது எண்னெய் தேய்த்துக் குளிப்பவர்கள் குளிர்ந்த நீரில் குளிக்கக் கூடாது அப்படி செய்யும்பொழுது சளி, காய்ச்சல் போன்ற உடல் நலக் குறைவுகள் ஏற்படும். எனவே வெந்நீரில் தான் எண்ணெய்க் குளியல் எடுக்க வேண்டும். 

அடுத்ததாக உடல் குளிர்ச்சியால் ஏற்படும் விளைவுகளை எப்படித் தவிர்க்கலாம்?

எண்ணெய்க் குளியலின் பொழுது உடல் திடீரெனெ குளிர்வதால் சில நேரங்களில் சளி, தலைவலி போன்ற உபாதைகள் ஏற்படுவது உண்டு அதனைத் தவிர்க்க எண்ணெயில் ஒரு சிட்டிகை மிளகுத்தூள், ஒரு சிட்டிகை சுக்குத்தூள், ஒரு பூண்டுப் பல் ஆகியவற்றைச் சேர்த்து லேசாகச் சூடாக்கி பின்னர் அதைத் தலையில் தேய்த்துக் கொள்ளலாம். அப்படி இல்லையென்றால் ஒரு சிட்டிகை மிளகுத்தூளை உச்சந்தலையில் தேய்த்து பின்னர் அதன்மேல் எண்ணெய் தேய்த்தும் குளிக்கலாம். 

பெண்கள் கூந்தலை நன்றாக உலர வைக்க வேண்டும். மேலும் எண்ணெய்க் குளியல் எடுத்த அன்றே தேங்காய் எண்ணெய் தேய்ப்பதைத் தவிர்க்க வேண்டும். மேலும் குளிர்ச்சியான உணவுகளைத் தவிர்க்க வேண்டும். 

மேலும் குளித்த பிறகு தலைக்கு சாம்பிராணி போடுவது நல்லது. சைனஸ் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் அடிக்கடி எண்ணெய்க் குளியல் எடுப்பதைத் தவிர்க்கலாம். அவ்வப்பொழுது எடுத்துக் கொள்ளலாம். மேலே உள்ள பாதுகாப்பு முறைகளையும் பின்பற்றலாம். 

எண்ணெய்க் குளியலுக்கு பெரும்பாலும் பயன்படுத்துவது நல்லெண்ணெய். அது தவிர தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் போன்றவையும் பயன்படுத்தப்படுகின்றன. உடலுக்கு எண்ணெய் தேய்க்கும் பொழுது சொத சொதவென முக்குவதும் தேய்க்காமல் குறைவான அளவு மட்டும் தேய்க்க வேண்டும். தலைக்கு எண்ணெய் வைக்கும் பொழுது அதிக அழுத்தமாக தேய்க்கத் தேவையில்லை. மிதமான மசாஜ் கூட நல்ல பலனைத் தரும். 

வருகிற தீபாவளியன்று இந்த ஆரோக்கியமான பழக்கத்தைத் துவங்கிடுங்கள். ஆரம்பத்தில் சில அசௌகரியங்கள் ஏற்பட்டாலும் தொடர்ந்து செய்து வர அனைத்தும் சரியாகி உடல் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.

நமது பரபரப்பான சூழலில் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பணிக்கு செல்லும் பொழுதும்  மனதையும் உடலையும் புத்துணர்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் வைத்திருக்க வேண்டியது மிகவும் முக்கியம். பணிக்கு செல்லும் பொழுது அன்றைய நாளை புத்துணர்ச்சியுடன் தொடங்க தேவையான 5 முக்கிய வழிமுறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்க்-கை கிளிக் செய்யவும்.

https://tamilsaaga.com/jobs/morning-habits-for-workers/ 

சிங்கப்பூர் போன்ற வெப்ப நாடுகளில் நெருக்கமான இடங்களில் தங்கி வேலை செய்பவர்கள் தங்கள் உடல் சூட்டைத் தனித்து ஆரோக்கியத்தையும் பாதுகாத்துக் கொள்வது மிகவும்  முக்கியம். எனவே எண்ணெய்க் குளியலை வழக்கமாக்கி உங்கள் உடலையும் மனதையும் ஆரோக்கியத்துடன் வைத்திடுங்கள்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

Related posts