‘சர்வைவல்’ அதாவது தனது குடும்பத்தினரை எவ்வாறு சுகமாக வாழ வைக்க வேண்டும், தனது குழந்தைகளுக்கு தரமான கல்வியினை அளிக்க வேண்டும் என்று குடும்பத்தை மட்டுமே பிரதானமாக வைத்து சிங்கப்பூரில் வேலை செய்யும் ஆண்களின் கஷ்டத்தினை வார்த்தைகளால் சொல்ல முடியாது.
இருந்தாலும் உங்களது உழைப்பின் பின்னால் இருக்கும் அர்ப்பணிப்பை சிறு கட்டுரையாக எழுதும் பொழுது உங்களின் உணர்வுகளை பிரதிபலிப்பது போன்ற ஒரு சிறு ஆறுதல் எங்களுக்கு கிடைப்பதே இந்த பதிவு. திருமணத்திற்காக ஒரு மாத விடுமுறைக்கு வந்துவிட்டு அவசர அவசரமாக திருமணத்தை முடித்துவிட்டு மனைவியின் தாலியில் உள்ள மஞ்சள் காய்வதற்கு முன்னே பிளைட் ஏறியவர்கள் இங்கு ஏராளம்.
வீடியோ காலில் மட்டுமே தினமும் குடும்பம் நடத்தி, கண்கலங்கி ஒருவருக்கொருவர் உணர்வுகளை பரிமாறி கொள்வது உண்மையில் மனதை ரணமாக்கும் ஒரு உணர்வு. இதற்கே இப்படி என்றால் கர்ப்பமாக இருக்கும் மனைவியை தங்களது உறவினர்களிடம் ஒப்படைத்துவிட்டு விமானம் ஏறும் கணவனின் மனநிலை அந்த இடத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.
மனைவி மாத மாதம் செக்கப் போய்விட்டாளா, சத்தான உணவு குழந்தைக்கு போய் சேர்ந்ததா, மாத்திரை சரியாக எடுத்துக் கொண்டார்களா,குழந்தையின் வளர்ச்சி வயிற்றில் எப்படி இருக்கும் என்று அன்றாடம் குழந்தையினை பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கும் சிங்கப்பூரில் வாழும் கணவனின் மனது.
கம்பெனி லீவு கொடுக்காது என்று தெரிந்துமே, கம்பெனியில் லீவ் அப்ளை செய்திருக்கேன், கண்டிப்பாக லீவ் கிடைத்துவிடும் என்று மனைவியின் மனதை தேற்ற மட்டுமே கணவனால் முடியும். அதை தாண்டி நல்ல மருத்துவமனையில் மனைவிக்கு பிரசவம் பார்க்க தேவையான பணத்தை மட்டுமே அவரால் சம்பாதிக்க முடியும்.
முதன்முறையாக எடுக்கப்படும் டாப்ளர் ஸ்கேனில் காட்டப்படும் குழந்தையின் படத்தை மொபைல் போனில் பார்க்கும் பொழுது அவனது கண்ணில் தோன்றும் ஒரு துளி கண்ணீரே அவனது அன்பைச் சொல்லும். மனைவிக்கு பிரசவ வலி எப்பொழுது வரும், வந்தால் அவளை வேகமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்களா? வாகனம் தயாராக இருக்குமா? என்று அவனது மனதில் பல நூறு கேள்விகள் ஓடும்.
பிரசவவலி வந்து, மனைவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதிலிருந்து உறவினர்களுக்கு நிமிடத்திற்கு 100 முறை தொலைபேசியில் அழைத்தாலும், திருப்பி மனைவி வந்து ஏன் ஊருக்கு வரவில்லை? என்று கேள்வி கேட்டால் அவளுக்கு என்ன பதில் சொல்வது என்ற உள்ளூர நெருடலும் ஏற்படும்.
கடைசியாக தான் பெற்ற பிள்ளையை கையில் கூட தொட முடியாமல், தொலைபேசியில் மட்டுமே கண்ணீருடன் பார்த்து ரசிக்கும் சிங்கப்பூர் கணவனின் மனதில் தோன்றும் வலி, பத்து மாத பிரசவ வலிக்கு சற்றும் குறைந்தது அல்ல.
தனது இரு குழந்தைகளின் பிரசவத்திற்கும் இந்தியாவிற்கு வர முடியாமல், இன்னும் தன் குடும்பத்திற்காக சிங்கப்பூரில் உழைக்கும் ஒரு தமிழனின் கதை தான் இந்த கட்டுரை. இதை உங்கள் முன் சமர்ப்பிப்பதில் தமிழ் சாகா பெருமை கொள்கின்றது.