சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் இருந்து Flyscoot TR-566 விமானம் நேற்று இரவு (டிச.26) 22.50க்கு திருச்சியை நோக்கி புறப்பட்டுச் சென்றது. இரவு நேரம் என்பதால், பெரும்பாலான பயணிகள் விமானம் புறப்பட்ட உடனேயே தூங்கிவிட்டனர். கிட்டத்தட்ட 4 மணி நேரம் விமானம் ஆகாய மார்க்கமாகவே இருந்திருக்கிறது. பயணிகள் அசந்து தூங்கியதால், அவர்களுக்கும் அது தெரியவில்லை.
ஏறக்குறைய திருச்சியை நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில், Flyscoot TR-566 விமானம் மீண்டும் சிங்கப்பூருக்கே திரும்பியது. அதுவும் பயணிகளுக்கு தெரியவில்லை. பைலட்கள் சார்பில் எந்த அறிவிப்பும் இல்லை. முன்னதாக, இரவு 22.50 மணிக்கு சாங்கி ஏர்போர்ட்டில் இருந்து கிளம்பிய அந்த விமானம், முழுமையாக 4 மணி நேர பயணத்துக்கு பிறகு, மீண்டும் சாங்கி ஏர்போர்ட்டுக்கே வந்திறங்கியது.
நள்ளிரவு நேரம் என்பதால், பயணிகளுக்கும் விமானம் திருச்சி தான் சென்றுக் கொண்டிருக்கிறது என்று நினைத்திருக்கின்றனர். மீண்டும் சிங்கப்பூருக்கு லேண்ட் செய்யும் போது தான், ‘விமானம் இப்போது சிங்கப்பூரில் தரையிறங்குகிறது’ என்ற தகவலையே பயணிகளுக்கு சொல்லியிருக்கின்றனர். விமானம் லேண்ட் ஆன போது, ‘திருச்சி வந்தாச்சு.. சீக்கிரம் வீட்டுக்கு போயிடலாம்’ என்று நினைத்த பயணிகளுக்கு, மீண்டும் சிங்கப்பூருக்கே கொண்டு வந்துவிட்டு, ஸ்கூட் விமானம் ஏகபோக சர்பிரைஸ் வைத்துவிட்டது.
பிறகு தான் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, விமானம் திருச்சி சென்றுக் கொண்டிருந்த போதே, மீண்டும் சிங்கப்பூருக்கு திருப்பி விடப்பட்டதாக விமானிகள் தெரிவித்துள்ளனர். எனினும், என்ன தொழில்நுட்பக் கோளாறு என்பதை தெளிவாக சொல்லவில்லை. இதையடுத்து, மற்றொரு புதிய விமானத்தை ஏற்பாடு செய்து, விடியற்காலை அந்த விமானத்தை சாங்கியில் இருந்து எடுத்து, இன்று காலை 9 மணியளவில் பயணிகளை திருச்சி கொண்டு வந்து சேர்த்துள்ளனர்.
ஆனால், ஒரு விஷயத்தை பாராட்டியாக வேண்டும். விமானத்தில் கோளாறு என்றவுடன் பயணிகளை பாதுகாக்கும் விதமாக, மீண்டும் சிங்கப்பூருக்கே விமானத்தை கொண்டு வந்து சேர்த்து, யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டதற்கு பயணிகள் சார்பாக சல்யூட். ஆனால், அதேசமயம், திருச்சி வந்தாச்சு என்று நிம்மதி மூச்சு விட்டவர்களை மீண்டும் சிங்கப்பூரிலேயே இறக்கியது ஏமாற்றமே.
இதில், மற்றொரு குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவெனில், இரண்டு நாட்களுக்கு முன்பு இதே போல் விமானம் ஒன்று சிங்கப்பூரில் சரியான நேரத்தில் எடுக்கப்படாமல் தாமதமாக கிளம்பியுள்ளது. அதாவது, இரவு 12.30 மணிக்கே திருச்சி வந்து சேர வேண்டிய விமானம், அதிகாலை 3 மணிக்கு தான் வந்து சேர்ந்துள்ளது.
இந்த வாரத்தில் இரண்டாவது முறையாக, சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு விமானம் காலதாமதமாக வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
EXCLUSIVE NEWS SOURCE:
நந்தனா ஏர் டிராவல்ஸ்
திருச்சி விமான நிலையம், திருச்சி 620 007
97 91 477 360
“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் பெற எங்களது முகநூல் பக்கத்தை Follow பண்ணுங்க”